டெல்டாவில் பலத்த மழை 2,000 ஏக்கர் நெற்பயிர் சேதம்
திருச்சி: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த பொன்னாவரை பகுதியில் 100 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதாலும், மழை காரணமாகவும் வாழையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் 2 மாதங்களாக மழை இல்லாத நிலையில் கால்நடைகள் மேய்ச்சல் இன்றி சிரமம் அடைந்தது.
கடந்த வாரம் முதல் அவ்வப்போது மாலை வேலையில் மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக மழை இல்லாத நிலையில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென காற்றுடன் 19 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கோடை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட 6000 ஏக்கர் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இதில் 2000 ஏக்கர் அறுவடை பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் துவங்க உள்ள நிலையில் மழையில் நெற்பயிர்கள் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளது.