வங்காள மொழியை வங்கதேச மொழி என குறிப்பிட்ட டெல்லி காவல்துறை இந்தியாவின் பன்மைத்துவத்தை தொடர்ந்து சிறுமைப்படுத்தும் செயல்: முதல்வர் டிவிட்
சென்னை: வங்காள மொழியை வங்கதேச மொழி என குறிப்பிட்ட டெல்லி காவல் துறையின் போக்கு, இந்தியாவின் பன்மைத்துவத்தை தொடர்ந்து சிறுமைப்படுத்தும் செயல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய உள்துறை அமைச்சரவையின் கீழ் இயங்கும் டெல்லி காவல் துறை வங்காள மொழியை ‘வங்கதேச மொழி’ எனக் குறிப்பிட்டிருக்கிறது. இது நம் நாட்டுப்பண் இயற்றப்பட்ட வங்க மொழிக்கு இழைக்கப்பட்டுள்ள நேரடி அவமதிப்பாகும். இத்தகைய அறிக்கைகள் தெரியாமல் நிகழ்ந்த பிழையோ தவறோ அல்ல.
இந்தியாவின் பன்மைத்துவத்தை தொடர்ந்து சிறுமைப்படுத்தி, ஒருவரது அடையாளத்தைக் கொண்டு தாக்கும் ஆட்சியின் கோர மனநிலையைத்தான் இவை அம்பலப்படுத்துகின்றன. இந்தி அல்லாத மொழிகளின் மீது இத்தகைய தாக்குதல் தொடுக்கப்படும் மேற்கு வங்க மாநிலத்தின் மொழியையும், மக்களையும் காக்கும் அரணாகச் சகோதரி மம்தா பேனர்ஜி திகழ்கிறார். இந்தத் தாக்குதலுக்குத் தக்க பதிலடி தராமல் அவர் ஓயமாட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.