டெல்லி ஏர்போர்ட்டில் தவறான ஓடுபாதையில் இறங்கிய ஆப்கன் விமானம்: பெரும் விபத்து தவிர்ப்பு
புதுடெல்லி: டெல்லி விமானத்தில் வேறொரு விமானம் புறப்பட தயாராக இருந்த ஓடுபாதையில் ஆப்கன் விமானம் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து டெல்லிக்கு நேற்று முன்தினம் அரியனா ஆப்கன் ஏர்லைன்ஸ் ஏ301 விமானம் வந்தது. இந்த விமானம் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள 29எல் ஓடுபாதையில் தரையிறங்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனுமதி தரப்பட்டது. ஆனால், திடீரென ஆப்கன் விமானம் 29எல் ஓடுபாதைக்கு பதிலாக அருகிலிருந்த 29ஆர் ஓடுபாதையில் தரையிறங்கியது.
அந்த 29ஆர் ஓடுபாதையில் ரியாத் செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானிக்கு உடனடியாக எச்சரிக்கை செய்யப்பட்டதை தொடர்ந்து இரு விமானங்களும் மோதுவது தவிர்க்கப்பட்டது. ஆனாலும் இந்த விவகாரம் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ஆப்கன் விமானத்தில் ஐஎல்எஸ் எனப்படும் இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் அமைப்பு செயலிழந்ததாகவும் அதனால் விமானம் வலது புறம் திரும்பி தவறான ஓடுபாதையில் தரையிறக்கப்பட்டதாகவும் அதன் விமானி தெரிவித்துள்ளார். ஓடுபாதை சரியாக தெரியாத அளவுக்கு வானிலையும் மோசமாக இருந்ததும் ஒரு காரணம் என விமானி கூறி உள்ளார். இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.