டெல்லியின் எச்சரிக்கையால் கடல்தாண்டி பயணமான மலையானவர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘எப்படியாவது கூட்டத்தை கூட்டி சுற்றுப்பயணத்திற்கு வரும் சேலத்துக்காரர் மனசை குளிர்த்துவிட வேண்டும் என்பதில் நிர்வாகிகள் தீவிரமாக இறங்கி இருக்காங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘டெக்ஸ்டைல் மாவட்டத்தில் சேலத்துக்காரர் ரெண்டு நாள் சுற்றுப்பயணம் செய்ய போறாராம்... அவரது வருகையை முன்னிட்டு, அந்த ரெண்டு நாட்களும் அதிகளவு கூட்டத்தை காண்பிக்க வேண்டும்னு நிர்வாகிகள் முடிவு செய்திருக்காங்களாம்.. இதற்காக முக்கிய நிர்வாகிகளுக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்காம்..
இதில் ஒரு நபருக்கு தலா இவ்வளவு என ‘ப விட்டமின்’ கொடுத்திருக்காங்க.. ஆனாலும், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வருவதை அவர்களால் உறுதி செய்ய முடியவில்லையாம்.. வேறுவழியின்றி, கூடுதலாக கொடுத்து அதிகளவில் கூட்டத்தை காட்டி சேலத்துக்காரர் மனசை குளிர்த்துவிடலாம் என நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனராம்.. இதற்கான வேலையில் அவர்கள் ரொம்ப தீவிரம் காட்டி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சொத்தை முடக்கப்போறதா டெல்லி விடுத்த கடும் எச்சரிக்கையால் மனம் உடைந்து போயிட்டாராமே மாஜி போலீஸ்காரரான மலையானவர்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சியின் மாநில தலைவராக இருந்த கர்நாடக மாஜி போலீஸ்காரரால் பதவி இல்லாமல் இருக்கவே முடியாத நிலை ஏற்பட்டிருக்காம்.. இவர் தலைவராக இருந்தபோது தன்னை தவிர வேறு யாரும் பேட்டிக்கொடுக்க கூடாதுன்னு தடைபோட்டாராம்.. டெல்லி தலைமை தன்னிடம் அதிக பவரை கொடுத்ததாக நினைத்து ரெண்டாங்கட்ட தலைவர்களை எல்லாம் நசுக்கி எடுத்தாராம்..
அவர்கள் பட்ட அவமானங்களை வெளியே சொல்லகூட தயங்குறாங்களாம்.. அந்த அளவுக்கு அவர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. அவர்கள் எல்லோரும் தற்போது ரொம்பவே ஹேப்பியாக இருக்காங்களாம்.. இந்த நிலையில் டெல்லி தலைமை மாஜி போலீஸ்காரருக்கு பதவி கொடுக்காததால் பெரும் மனப்புழுக்கத்தில் இருக்காராம்.. இந்நிலையில் தான் இலைக்கட்சி தலைவர் ஊரான மாங்கனி மாவட்டத்துல அவருக்கென ரசிகர் மன்றம் தொடங்கியிருக்காங்களாம்..
இதனால அவர் தனிக்கட்சி தொடங்கப்போவதாக தகவல் பரவிக்கிட்டு இருக்குது.. அதோடு இலைக்கட்சி தலைவரால் தனது பதவி பறிக்கப்பட்டதையும் அவர் மறந்திடலையாம்.. அரசியல் நீளமானது.. சமயம் வரும்போது செய்யவேண்டியதை செய்வேன் என நினைத்துக்கிட்டிருக்காராம்.. இதற்கான முதல்படிதான் குக்கர்காரரை சந்தித்ததாம்.. தேனிக்காரரையும் மீட் செய்ய போவதாக சொல்லியிருக்காரு.. இவர்கள் ரெண்டுபேரும் இலைக்கட்சி தலைவருக்கு பிடிக்கவே பிடிக்காதாம்..
இதனால் கூட்டணியை உடைக்கப்போவதாக மலராத கட்சியின் நிர்வாகிகள் டெல்லியிடம் முறையிட்டதாக சொல்லப்படுது.. உச்சகட்ட கோபம் அடைந்த டெல்லியோ, பொறுப்பாளர் மூலமாக கடும் எச்சரிக்கை விடுத்ததாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. நல்லவர் வல்லவருன்னு நினைத்து மாநில தலைவர் பொறுப்பை கொடுத்தோம்.. ஆனால் கட்சிக்கு எதிரான வேலையை தொடர்ந்து செய்து வருவதை இனிமேலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.. தனிக்கட்சி தொடங்குவது, கூட்டணிக்கு எதிராக வேலையை செய்து வந்தால், சொத்துகளை முடக்கி மூலையில் வைத்துவிடுவோம்..
எங்கெல்லாம் யார் பெயரில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளது, ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட்ட செங்கல் சூளை கருவி உள்ளிட்டவை குறித்த தகவலும் நெறையா இருக்குதுன்னு தெரியும் எனவும், ஜெயிலுக்கு அனுப்ப கூட தயங்கமாட்டோம் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டதாம்.. இதனால மனசொடிந்துபோன மாஜி போலீஸ்காரர் கடல் தாண்டி யாழ்ப்பாணத்துக்கு போனதாகவும் கட்சிக்காரங்க சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.‘‘அனல்மின் பகுதியில் ‘கந்து’ அக்னியாக பாய்வதால் சமூக அமைப்புகள் கொந்தளித்து விட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடல் ஊர் மாவட்டத்தில் செயல்படும் அனல்மின் பகுதியில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையில் பணிபுரிந்து வர்றாங்க.. இதுதவிர வணிக வளாகங்கள், வியாபார தலங்களிலும் நேரடி, மறைமுகமாக ஆயிரக்கணக்கானோர் வேலை செய்கிறார்களாம்.. இவர்களை ஒரு கும்பல் குறிவைத்து கந்து வட்டி வசூலை நடத்துகிறதாம்.. நாள், வாரம், மாத வட்டி என விதவிதமான வடிவங்களில் பணத்தை கொடுத்து வட்டி கேட்கிறார்களாம்..
தாங்கள் குறிப்பிட்டபடி வட்டி கட்டாவிடில் வாகனங்களை பறிப்பது, பொதுவெளியில் அவமானப்படுத்துவது போன்ற துணிகர செயல்களில் ஈடுபடுகிறார்களாம்.. இதனால் பணத்தை இனிக்க இனிக்க வாங்கியவர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி இருக்கிறார்களாம்.. இதில் அனல்மின் நிலைய பணியாளர்களும் அடங்குமாம்.. அனல்மின் பகுதியில் கந்து அக்னியாக பாய்வதால் மக்கள் அவதிக்குள்ளாவதை பார்த்து கொதித்தெழுந்த சமூக அமைப்புகள் முட்டுக்கட்டை போட போர்க்கொடி தூக்கி உள்ளாங்களாம்..
முக்கிய விஐபிகளுக்கு கடிதங்களும் பறந்துள்ளதாம்.. இதுபற்றிதான் அனல்மின் பகுதியில் பரவலாக பேச்சு ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பலாப்பழக்காரரின் கை ஓங்கிவிட கூடாது என்பதே ஹனிபீ மாவட்ட நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சின்ன மம்மி, குக்கர்காரர் மற்றும் பலாப்பழக்காரர் ஆகியோர் பிரிந்து சென்றவர்களை இலைக்கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டுமென்பதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும், சேர்க்கவே முடியாது என்பதில் சேலத்துக்காரர் ரொம்பவே கறாராக இருக்கிறார்.. அவரது இந்த முரட்டுப்பிடிவாதம், மாவட்டங்களை எப்படியோ... பலாப்பழக்காரரின் சொந்த மாவட்டமான ஹனிபீ மாவட்ட இலைக்கட்சியினருக்கு பெரும் ஆறுதலை தந்துள்ளதாம்.. காரணம், இணைப்பு மட்டும் நடந்து விட்டால், மீண்டும் பலாவின் கை ஓங்கி, இம்மாவட்டத்தைச் சேர்ந்த இலைக்கட்சியினர் பலருக்கு வாய்ப்பு இல்லாமல் போகுமாம்... ஆகையால் இணைப்பை ஹனிபீ மாவட்ட இலைத்தரப்பினர் சுத்தமாக விரும்பவில்லையாம்..
அதேநேரம் சேலத்துக்காரர், பலாப்பழக்காரர் ஆகியோரை இணைத்து பிளக்ஸ் வச்சும் பலனில்லையே என பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள் விரக்தியின் விளிம்பில் இருக்காங்களாம்.. இதனிடையே மாஜி காக்கி சட்டைக்காரர், குக்கர்காரரை சந்தித்து பேசியதோடு, வரும் நவம்பர் மாதத்திற்குள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படுவர் என அவரிடம் உறுதியாக கூறியுள்ளாராம்..
இந்த தகவல் மலராத கட்சியினர் மூலம் பரவ, ஹனிபீ மாவட்ட இலைக்கட்சியினர் ரொம்பவே கவலையில் இருக்கிறார்களாம்.. இணைப்பு நடந்துவிட்டால் மாவட்டத்தில் பலாப்பழக்காரர், அவரது ஆதரவாளர்களின் கை ஓங்கி விடும்; நம்ம அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதே அவர்களது விரக்திக்கு காரணமாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.