டெல்லியில் நச்சுக் காற்றை சுவாசிக்கும் குழந்தைகள் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? ராகுல்காந்தி கேள்வி
புதுடெல்லி: டெல்லியில் குழந்தைகள் நச்சுக்காற்றை சுவாசிக்கும்போது பிரதமர் மோடியால் எப்படி மவுனமாக இருக்க முடிகிறது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். டெல்லியில் கடந்த 15 நாட்களாக மிகவும் மோசமான காற்று மாசுபாடு நிலவி வருகின்றது. டெல்லிக்கான காற்றுத் தரத்தின் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின் முன்னறிவிப்பின்படி வரும் வாரத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி இந்த விவகாரம் தொடர்பாக தனது வீட்டில் சில தாய்மார்களை சந்தித்து அவர்களுடனான உரையாடலின் வீடியோவை பகிர்ந்து கொண்டுள்ளார். நான் சந்திக்கும் ஒவ்வொரு தாயும் என்னிடம் கூறுகிறார்கள். அவர்களுடைய குழந்தை நச்சுக்காற்றை சுவாசித்து வளர்கிறது. அவர்கள் சோர்வடைந்து பயந்து கோபமாக இருக்கிறார்கள். இந்தியாவின் குழந்தைகள் நம் முன் சுவாசிப்பதற்கு திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.
உங்கள் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது? உங்கள் அரசு ஏன் அவசர திட்டம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றைக் காட்டவில்லை? இந்தியாவிற்கு காற்று மாசுபாடு குறித்த உடனடி, விரிவான நாடாளுமன்ற விவாதம் மற்றும் சுகாதார அவசர நிலையை சமாளிப்பதற்கு தேவையான கடுமையான செயல்படுத்தக்கூடிய செயல்திட்டம் தேவை. எங்களது குழந்தைகள் சுத்தமான காற்றுக்கு தகுதியானவர்கள். சாக்குப்போக்குகள் மற்றும் கவனச்சிதறல்கள் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.