டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட்ட எலும்புக்கூடு தர்மஸ்தலா மீது புகார் கூறியவரிடம் விசாரணை: இன்று சேலத்திற்கு அழைத்து செல்லவும் எஸ்ஐடி முடிவு
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக புகார் அளித்த புகார்தாரர் சி.என்.சின்னய்யாவை எஸ்.ஐ.டி அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். புகார்தாரர் சின்னய்யா கையில் வைத்துக்கொண்டு சுற்றிய எலும்பு, டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட்டதும், அங்கு ஒரு பெரிய நபரை சந்தித்ததும், மற்றொரு புகார்தாரரான ஜெயந்த் மூலம் அம்பலமாகியுள்ளது. தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக சின்னய்யா புகார் அளித்த நிலையில், தன் மகள் தர்மஸ்தலாவில் காணாமல் போனதாக சுஜாதா பட் என்ற பெண் புகார் அளித்தார். தர்மஸ்தலாவில் சடலம் புதைக்கப்பட்டதைத் தானும் பார்த்ததாக ஜெயந்த் என்பவர் கூறினார்.
தர்மஸ்தலா குறித்து புகார் அளித்த அனைவரிடமும் எஸ்.ஐ.டி விசாரணை நடத்திவருகிறது. எஸ்.ஐ.டி நடத்திய விசாரணையில் சில தகவல்கள் கிடைக்க, பெங்களூருவில் உள்ள ஜெயந்த்தின் வீட்டில் வைத்து சின்னய்யா விசாரிக்கப்படுகிறார். நேற்று காலை 6 மணிக்கு சின்னய்யாவை தர்மஸ்தலாவிலிருந்து பெங்களூருவிற்கு அழைத்து வந்த எஸ்.ஐ.டி அதிகாரிகள், பெங்களூருவில் உள்ள ஜெயந்த்தின் வீட்டில் வைத்து சின்னய்யாவிடம் விசாரித்தனர்.
இந்த விசாரணையில் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து, இன்றைய தினம் சின்னய்யா சேலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள அவரது வீட்டில் வைத்து விசாரிக்கப்படுவார் என்றும், அவரது சேலம் வீட்டில் ஆய்வு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.