17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தலைமறைவாக இருந்த டெல்லி சாமியார் கைது
புதுடெல்லி: 17 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி ஆக்ராவில் கைது செய்யப்பட்டார். டெல்லியின் வசந்த்குஞ்ச் பகுதியில் ஸ்ரீ சாரதா இந்தியா மேலாண்மை நிறுவனம் என்ற தனியார் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதன் நிர்வாகியாக சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி பொறுப்பு வகித்து வந்தார்.
இவர் அங்கு படிக்கும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை தருவதாக புகார் எழுந்தது. மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவது, மாணவிகளை அத்துமீறி தொடுவது போன்ற செயல்களை செய்து வந்துள்ளார். இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் 30க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது 17 மாணவிகள் சைதன்யானந்த சரஸ்வதி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினர். இந்த புகாரின் அடிப்படையில் சைதன்யானந்த சரஸ்வதிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதையறிந்த சைதன்யானந்த சரஸ்வதி டெல்லியில் இருந்து தப்பி தலைமறைவானார்.
இதைத்தொடர்ந்து சாமியார் சைதன்யானந்த சரஸ்வதிக்கு தொடர்புடைய ரூ.8 கோடி மதிப்பிலான சொத்துகளை காவல்துறை முடக்கியது. இந்நிலையில் ஆக்ராவில் ஒரு ஹோட்டலில் மறைந்திருந்த சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியை டெல்லி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சைதன்யானந்த சரஸ்வதியை 5 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.