டெல்லியில் வடமாநிலத்தவரை வைத்து பாமக நடத்திய போராட்டம் நகைப்பாக இருக்கிறது: பாமக வழக்கறிஞர் பாலு பேட்டி
சென்னை: சட்டமேதை அம்பேத்கரின் 70வது நினைவு தினத்தையொட்டி சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் பாமக சார்பில் அன்புமணியின் ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக சொல்லும்பொழுது திருமா மவுனியாக உள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால்தான் பட்டியல் சமூகத்தில் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கிறதா என்று ஆய்வை மேற்கொள்ள முடியும்.
இத்தகைய அரசியலை செய்யாமல் திருமாவளவன் பட்டியலின சமூகத்தின் தலைவராக தன்னை காட்டி அரசியல் செய்து கொண்டு, பல்வேறு தில்லுமுல்லுகளை செய்து, தனக்கு ஆபத்து வரும்போது எல்லாம் பட்டியலினத்திற்கு பின்னாலும், அம்பேத்கர் பின்னாலும் ஒளிந்து கொள்கிறார். பட்டியல் சமூகத்தின் உரிமைகளை கேட்பவராக திருமாவளவன் உள்பட அனைவருமே மாற வேண்டும். அதை பாமக தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தை கண்டித்து ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி மற்றும் அருள் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டம் பார்ப்பதற்கு நகைப்பாக இருக்கிறது.
எல்லோரும் நகைக்கிறார்கள். வடமாநிலத்தவர் 50 பேரை வைத்துக் கொண்டு ராமதாசை அவமதிக்கிறார்கள். அன்புமணி தலைமையில் இயங்குபவர்கள் ராமதாசின் புகழை பரப்புகிற, அவரைப் போற்றுகிற பணியில் ஈடுபடுகிறோம், ஆனால் ராமதாசுடன் இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள் அவருக்கு சிறுமை சேர்க்கக் கூடிய வேலையைதான் செய்து கொண்டிருக்கிறார்கள். பாமக அன்புமணி தலைமையில் தான் 100% இருக்கிறது. வரும் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் அன்புமணி தலைமையிலான பாமக போட்டியிடும். இதில் எந்த இடையூறும், தடையும் இல்லை. டெல்லி நீதிமன்றத்தில் வழக்கை முடித்துவிட்டு வெளியில் வருவதற்குள் அவசர அவசரமாக ஜி.கே.மணி ஓடி வந்து வெற்றி வெற்றி என்று ஊடகங்களில் கூறிவிட்டார்.
இரண்டு பேருமே சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியதாக ஜி.கே.மணி கூறிவிட்டு அதை தங்களது வெற்றி என்று கூறியுள்ளார். கட்சி இருதரப்பிற்கும் இல்லை என்று சொல்வதுதான் வெற்றியா?.
2026 ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியின் பதவி காலத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்தது. இந்த கடிதத்தை ரத்து செய்ய கோரி தான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை ரத்து செய்ய முடியாது என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.
இந்த வழக்கில் மாம்பழம் சின்னம் தொடர்பாக எந்த வாதங்களும் எழவில்லை. தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பொதுவாக ஒரு கருத்தைச் சொன்னார், ஒரு கட்சியில் குழப்பம் ஏற்படும்பொழுது அந்த சின்னத்தை முடக்குவோம் என்று அவர் கூறினார். ஆனால் மாம்பழம் சின்னத்தை முடக்குவோம் என்று தேர்தல் ஆணையம் சொல்லவில்லை. வரும் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஏற்கனவே எங்களுக்கு சின்னம் கொடுக்கப்பட்டு விட்டது. சின்னம் எங்களிடம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.