டெல்லியில் பரபரப்பு ஹுமாயூன் கல்லறை அருகே கட்டிடம் இடிந்து 6 பேர் பலி
புதுடெல்லி: டெல்லி நிஜாமுதீன் பகுதியில் முகலாய பேரரசர் பாபரின் மகனான ஹுமாயூனின் கல்லறை அமைந்துள்ளது. இது 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட 16ம் நூற்றாண்டின் நினைவுச்சின்னமான இந்த கல்லறை நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இதை பார்வையிடுகின்றனர்.
இந்நிலையில் சுதந்திர தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறையின் காரணமாக நேற்று ஹுமாயூனின் கல்லறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை சுமார் 4 மணியளவில் ஹுமாயூன் கல்லறை அருகில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதில் 6 பேர் பலியானார்கள். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.