டெல்லியில் நடிகை ஹூமா குரேஷியின் உறவினர் குத்திக் கொலை: இருவர் கைது
டெல்லி : டெல்லியில் வாகன பார்க்கிங்கில் ஏற்பட்ட தகராறில் நடிகை ஹூமா குரேஷியின் உறவினர் குத்திக் கொலை செய்யபட்டார். நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் ஆசிப் குரேஷி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியின் நிஜாமுதீன் காவல் நிலையப் பகுதியின் ஜங்புரா போகல் பஜார் பாதையில் இரவு 11 மணியளவில் வாகன பார்க்கிங்கில் ஆசிப் குரேஷிக்கும் ஜுஜ்ஜாலா மற்றும் கௌதம் ஆகியோர் இடையே சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. ஆசிப் குரேஷி தனது வீட்டின் வாயிலுக்கு வெளியே ஸ்கூட்டரை நிறுத்த வேண்டாம் என ஜுஜ்ஜாலா, கௌதம் ஆகியோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கூர்மையான பொருளால் ஆசிப் மார்பில் தாக்கப்பட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆசிப் உடனடியாக ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கொலை செய்த ஜுஜ்ஜாலா (19) மற்றும் கௌதம் (18) ஆகியோர் அடையாளம் காணப்பட்டு இருவர் மீதும் வழக்குப்பத்திவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக தனது கணவர் வேண்டுமென்றே கொல்லப்பட்டதாக ஆசிப் குரேஷியின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.