டெல்லியில் கனமழை காரணமாக யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு: மக்கள் அச்சம்
டெல்லி: வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் டெல்லி-என்சிஆரில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக டெல்லி-குருகிராம் எல்லையில், நீர்மட்டம் அதிகரிப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் யமுனை நதியின் நீர்மட்டம் இன்று காலை அபாய அளவைத் தாண்டியது. இதனால் யமுனை நதியின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். யமுனை உட்பட சில ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்ததால், யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையின் மதகுகளை அதிகாரிகள் திறக்க தொடங்கினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிப்பு ஏற்படக்கூடிய சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் நேற்று 7-8 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குருகிராமில் பெய்த கனமழையால் மக்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்தனர். யமுனை நதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால், பழைய ரயில் பாலத்தில் இன்று மாலை 5 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. வெள்ள அச்சுறுத்தலுக்கு மத்தியில், முதலமைச்சர் ரேகா குப்தா மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று வலியுறுத்திள்ளார். இந்நிலையில் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வயல்களில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மீட்புக் குழுவை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தற்போது நிலைமை மோசமாகி உள்ளது. நேற்று இரவு முதல் மக்களை மீட்டு வருகிறோம். மக்களை பாதுகாப்பாக மீட்டுள்ளோம். நேற்று இரவு முதல் 50-60 பேரை மீட்டுள்ளோம். சிக்கித் தவிக்கும் கால்நடைகளையும் மீட்டு வருகிறோம். இந்த படகுகள் டெல்லி அரசின் சார்பாக இயக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.