டெல்லிக்கு வந்துள்ள சீன அமைச்சர்; மோடி - ஜி ஜின்பிங் சந்திப்புக்கு ஏற்பாடு: 7 ஆண்டுகளுக்கு பிறகு 31ம் தேதி பிரதமர் பயணம்
புதுடெல்லி: கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா செல்லவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்க சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இன்று அவரை சந்திக்கிறார்.பிரதமர் மோடி, கடந்த ஏழாண்டுகளில் இல்லாத வகையில் தனது முதல் சீன பயணமாக, வரும் 31 முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை செல்லவுள்ளார். தியான்ஜினில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு (எஸ்.சி.ஓ) உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, மூன்று நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தடைந்தார். மோடி பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தை நேற்று மாலையும், எல்லைப் பிரச்னை தொடர்பான 24வது சுற்று சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை இன்று காலை அஜித் தோவலுடனும் நடைபெறுகிறது.
தொடர்ந்து, வாங் யீ இன்று மாலை 5.30 மணிக்கு பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது, எஸ்.சி.ஓ உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் மற்றும் இந்திய-சீன உறவுகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பிரதமரிடம் அவர் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பின் நிகழ்ச்சி நிரலையும் வாங் யீ மற்றும் ஜெய்சங்கர் இறுதி செய்ய உள்ளனர். இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.