டெல்லி கார் குண்டுவெடிப்பில் 12 பேர் பலியான சம்பவம்: ‘ஒயிட் காலர்’ தீவிரவாதிகள் சதி அம்பலம்
* புல்வாமா டாக்டருக்கு தொடர்பு; போலி ஆவணங்கள் மூலம் கைமாறிய கார்
* உளவுத்துறையின் கண்ணில் தீவிரவாதிகள் மண்ணைத் தூவியது எப்படி?
புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியான நிலையில், ‘ஒயிட் காலர்’ தீவிரவாத கும்பலின் கொடூர சதி அம்பலமாகி உள்ளது. புல்வாமா டாக்டருக்கு தொடர்பு இருப்பதாகவும், போலி ஆவணங்கள் மூலம் கார் கைமாறியதும், உளவுத்துறையின் தோல்வியாகவும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தலைநகர் டெல்லியின் மிகவும் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியும், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமுமான செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.52 மணியளவில் நடந்த சக்திவாய்ந்த கார் குண்டு வெடிப்பில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களில் இருவரது அடையாளம் தற்போது தெரியவந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த அசோக் குமார் (34) மற்றும் டெல்லியைச் சேர்ந்த அமர் கட்டாரியா (35) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மற்றவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், தேவைப்பட்டால் டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப் போவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கோரச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இதன் பின்னணியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தொடர்பு இருக்கலாம் என வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் இந்த அமைப்பு பின்பற்றிய தீவிரவாத தாக்குதல் முறைகளை ஆய்வு செய்யும் போது, இந்த சம்பவத்தோடு ஒத்துபோவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தாக்குதல் நடத்தும் செயல்பாட்டு முறையை இந்த அமைப்பு பின்பற்றி வருவது உளவுத்துறை வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கும், ஜூலை மாதம் நடந்த மகாதேவ் ராணுவ நடவடிக்கைக்குமான இடைவெளி மூன்று மாதங்கள் இருந்த நிலையில், தற்போது மீண்டும் மூன்று மாதங்கள் கழித்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
விசாரணையின்போது, வெடி விபத்துக்குள்ளான ‘HR 26 CE 7674’ என்ற பதிவு எண் கொண்ட ஹூண்டாய் ஐ20 ரக கார் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த சல்மான் என்பவருக்குச் சொந்தமான இந்த கார், கடந்த மார்ச் மாதம் தேவேந்திரா என்பவருக்கு விற்கப்பட்டுள்ளது. ஆனால், போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியே இந்த காரின் உரிமம் பலமுறை கைமாற்றப்பட்டுள்ளது. இதில் ஒரு போலி அடையாள அட்டை புல்வாமாவைச் சேர்ந்தவர் பெயரில் இருப்பது, ஆரம்பத்திலேயே தீவிரவாத சதியை நோக்கி விசாரணையைக் கொண்டு சென்றது. தற்போது இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக, தெற்கு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் முகமது என்பவருக்குச் சொந்தமான கார் இது என்பது தெரியவந்துள்ளது.
இவர், குறிப்பிட்ட அமைப்பில் படித்தவர்கள் அடங்கிய ‘ஒயிட் காலர்’ தீவிரவாத குழுவின் ஓர் அங்கமாகச் செயல்பட்டு வந்துள்ளார். அரியானாவின் ஃபரிதாபாத்தில் சுமார் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு, இந்த தீவிரவாத குழுவின் முக்கிய உறுப்பினர்களான டாக்டர் முஜாமில் ஷகீல் மற்றும் டாக்டர் ஆதில் ரத்தர் ஆகியோர் கைது செய்யப்பட்ட செய்தி வெளியானதும், பீதியடைந்த மூன்றாவது கூட்டாளியான டாக்டர் உமர் முகமது என்பவரே, செங்கோட்டை அருகே காரை வெடிக்கச் செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேநேரம் இந்தச் சம்பவம் உளவுத்துறையின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒருபுறம், மிகப்பெரிய தீவிரவாத சதியை முறியடித்து, பெரும் அளவிலான வெடிபொருட்களைப் பறிமுதல் செய்தது உளவுத்துறையின் வெற்றியாகப் பார்க்கப்பட்டாலும், அதே குழுவைச் சேர்ந்த மற்றொரு நபர் டெல்லியில் தாக்குதல் நடத்தியது உளவுத் துறையின் தோல்வியாகவே கருதப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், பாகிஸ்தானை மையமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என வலுவாக சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக, அந்த அமைப்பு பின்பற்றும் ‘மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தாக்குதல்’ என்ற பாணி சுட்டிக்காட்டப்படுகிறது. இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் சி.ஆர்.பி.எஃப். பள்ளி அருகே நடந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்ற ‘ஜஸ்டிஸ் லீக் இந்தியா’ என்ற காலிஸ்தான் ஆதரவு குழுவின் தகவல் தொடர்புகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில், வெள்ளை நிற ஐ20 கார் நேற்று மதியம் 3.19 மணிக்கு செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்திற்குள் நுழைவதும், மாலை 6.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறுவதும் பதிவாகியுள்ளது.
காரை ஓட்டி வந்த தற்கொலைப்படை தீவிரவாதி, நீலம் மற்றும் கருப்பு நிறத்திலான சட்டை அணிந்திருப்பதும், வாகன நிறுத்துமிடத்திற்குள் நுழையும்போது அவரது கை ஜன்னலுக்கு வெளியே இருப்பதும் படங்களில் தெளிவாகத் தெரிகிறது. சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தபோது, குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பெரிய பள்ளம் எதுவும் ஏற்படவில்லை என்பதும், பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து வெடிகுண்டு சிதறல்களோ, ஆணிகளோ கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இது, வழக்கமான வெடிகுண்டுகளைப் போல் அல்லாமல், ஒரு ‘கட்டுப்படுத்தப்பட்ட குண்டுவெடிப்பாக’ இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. இதுகுறித்து ஒரு புலனாய்வு அதிகாரி கூறுகையில், ‘இந்த சம்பவத்தில் அம்மோனியம் நைட்ரேட் மற்றும் ஆர்டிஎக்ஸ் கலந்த உயர் ரக வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிட்டார்.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட உள்ளது. டெல்லி மட்டுமின்றி மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, லக்னோ, பஞ்சாப், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டாக்டரின் தாய், 2 சகோதரர்கள் கைது
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாகவும், மூளையாகவும் டாக்டர் உமர் முகமது என்பவர் செயல்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. இந்நிலையில், குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத உடல், காரை ஓட்டி வந்த உமர் முகமதுவுடையதாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக, தற்போது டாக்டர் உமர் முகமதுவின் தாய் மற்றும் இரண்டு சகோதரர்களை காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல் உமர் முகமதுவுடையதுதானா என்பதை உறுதி செய்ய, குடும்பத்தினரிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அவர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணைக்காகவே காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
காருக்குள் வெடிகுண்டு இருந்ததா?
குண்டுவெடிப்பு நடந்த இடத்தை நேற்றிரவு பார்வையிட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘நாங்கள் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். டெல்லி காவல்துறை ஆணையர் சதீஷ் கோல்ச்சா கூறுகையில், ‘மெதுவாகச் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று செங்கோட்டை போக்குவரத்து சிக்னலில் நின்றபோது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. காரின் உள்ளே பயணிகள் இருந்துள்ளனர். இந்த வெடிப்பால் அருகிலிருந்த கார்களும் சேதமடைந்தன’ என்றார். இந்த சம்பவத்தையடுத்து டெல்லி முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள், செங்கோட்டை, அரசு கட்டிடங்கள் மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூறிய துணைத் தலைமை தீயணைப்பு அதிகாரி ஏ.கே. மாலிக், ‘தகவல் கிடைத்தவுடன் நாங்கள் உடனடியாகச் செயல்பட்டோம். ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. இரவு 7.29 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது’ என்று தெரிவித்தார். சம்பவம் குறித்து பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா முழுமையாக விளக்கியுள்ளார். குண்டுவெடிப்பில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஜீஷான், ‘எனக்கு முன்னால் சுமார் இரண்டு அடி தூரத்தில் அந்த கார் இருந்தது. அதில் வெடிகுண்டு இருந்ததா அல்லது வேறு ஏதேனும் இருந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது’ என்றார்.
வெற்றுப் பேச்சுகளை அம்பலப்படுத்துகிறது
பீகாரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், நேற்று நாட்டின் தலைநகரான டெல்லியில், உயர் பாதுகாப்பு மிகுந்த பகுதியான செங்கோட்டை அருகே சக்திவாய்ந்த கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்து 12 அப்பாவி மக்கள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம், ஒன்றிய பாஜக அரசின் தேசிய பாதுகாப்பு கொள்கைகள் மீது கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. எதிர்கட்சிகளும் கடுமையாக ஒன்றிய அரசை விமர்சித்துள்ளன. வெடிகுண்டு தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு, தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு பெருமையடித்துக் கொண்டாலும், அதே குழுவைச் சேர்ந்த மற்றொரு தீவிரவாதி டெல்லியின் மையப்பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியிருப்பது, உளவுத்துறையின் வெற்றியா அல்லது படுதோல்வியா என்ற விவாதத்தை உருவாக்கியுள்ளது.
‘ஒயிட் காலர்’ தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முழுமையாக முறியடிக்கத் தவறியதும், முக்கிய குற்றவாளியைக் கோட்டை விட்டதும் ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைப்புகளின் பெரும் செயல்பாட்டுத் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ மற்றும் ‘கடுமையான நிலைப்பாடு’ என ஒன்றிய அரசு தொடர்ந்து கூறிவரும் நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் டெல்லியிலேயே தாக்குதல் நடத்தும் அளவுக்குத் துணிந்திருப்பது, ஒன்றிய அரசின் பாதுகாப்பு குறித்த வெற்றுப் பேச்சுகளை அம்பலப்படுத்துகிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளின் செயல்பாட்டு முறையைக் கூட கணிக்கத் தவறியதும், போலி ஆவணங்கள் மூலம் கார் பலமுறை கைமாறியதைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதும் பாதுகாப்பு அமைப்புகளின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது.
இந்தத் தாக்குதல், தலைநகரில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஒன்றிய அரசு தவறிவிட்டதையே வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், ஒன்றிய அரசின் பாதுகாப்பு முகமைகள் மீதான மக்கள் நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.