டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: குற்றவாளிகளை வேட்டையாட உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு
டெல்லி: டெல்லியில் தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் கடுமையாக தண்டிக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். தலைநகர் டெல்லியின் மிகவும் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியும், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமுமான செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.52 மணியளவில் நடந்த சக்திவாய்ந்த கார் குண்டு வெடிப்பில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை சிறந்த புலனாய்வு அமைப்புகளால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அனைத்து கோணங்களிலும் முழு வீச்சுடன் இந்த சம்பவம் குறித்து சிறந்த புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன’ என்று கூறியிருந்தார். இந்த நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று (நவ. 11) கர்தவ்ய பவனில் உயர் மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் டெல்லியில் தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் கடுமையாக தண்டிக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். கார் குண்டு தாக்குதலின் பின்னணியில் உள்ள ஒவ்வொருவரையும் வேட்டையாட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.