டெல்லியில் அமித்ஷாவுடன் தனியாக ஆலோசனை நடத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் திடீர் சந்திப்பு: டிடிவி, ஓபிஎஸ்சை கூட்டணியில் சேர்க்க அழுத்தம்
சென்னை: டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில், சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது டிடிவி, ஓபிஎஸ்சை மீண்டும் கூட்டணி சேர்க்க வேண்டும் என்று எடப்பாடிக்கு நயினார் நாகேந்திரன் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டும் மே மாதம் சட்டமன்ற தேர்தலில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக-பாஜ கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது.
இந்த கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று பாஜ வலியுறுத்தியது. இதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எடப்பாடி பேச்சை கேட்டு தொடர்ந்து பாஜ புறக்கணித்ததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ், டிடிவி.தினகரன் அதிரடியாக அறிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாஜ மேலிடம், பிரிந்து சென்றவர்களை கூட்டணிக்குள் மீண்டும் இணைக்க முயற்சி செய்து வருகிறது.
அதே நேரத்தில் அதிமுக ஒன்றிணைய வேண்டும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி போர்க்கொடி தூக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடிக்கு 10 நாள் கெடுவும் விதித்தார். இதனால், எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனின் மாவட்ட செயலாளர் பதவி உள்ளிட்ட கட்சி பதவிகளை பறித்தார். அவரது ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, செங்கோட்டையன் கடந்த வாரம் திடீரென டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், எடப்பாடி மீது சரமாரி புகார்களை தெரிவித்தார். அதனை தொடர்ந்து, பாஜ மேலிடம் அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி, கடந்த 16ம் தேதி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.
இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம், அதிமுக-பாஜ கூட்டணியில் இடம்பெற வேண்டிய கட்சிகள், எவ்வளவு சீட்டுகளில் போட்டியிடலாம், கூட்டணி அமைச்சரவை, பிரிந்து சென்ற தலைவர்களை இணைப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றவர்கள் இல்லாததால், 45 தொகுதிகளை நாம் இழக்க நேரிட்டது. எனவே, அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று அமித்ஷா கூறினார்.
ஆனால், இந்த சந்திப்பின் போது, அமித்ஷாவின் கோரிக்கையை எடப்பாடி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை. அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்தால், தேவையில்லாத குழப்பம் தான் வரும். அவர்கள் என்னை கவிழ்க்க பார்ப்பார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
அதே நேரத்தில் பாஜவின் என்டிஏ கூட்டணியில் வேண்டுமென்றால் சேர்த்து கொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்கு சீட் தருகிறோம். அவர்களுக்கு நீங்கள் சீட்டை கொடுங்கள் என்று எடப்பாடி கூறியதாக தகவல்கள் வெளியானது. அமித்ஷாவை சந்தித்துவிட்டு சொகுசு காரில் ஒரு தொழிலதிபருடன் திரும்பி எடப்பாடி தனது முகத்தை மறைத்தபடி சென்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தி, விவாத பொருளாக மாறியது. ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர் முகத்தை மூடியபடி செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி, நேரடியாக பதில் அளிக்காமல் நழுவினார். இந்நிலையில், எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவது தற்கொலைக்கு சமம் என்று டி.டி.வி.தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்றும் அவர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
அதே நேரத்தில், அதிமுகவில் சேர நான் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்று ஓபிஎஸ் தெரிவித்து உள்ளார். இந்த சூழலில், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை என்டிஏ கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக, எடப்பாடியுடன் ஆலோசனை நடத்த பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில், சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், எடப்பாடியை, நயினார் நாகேந்திரன் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது, பாஜ மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆலோனையில் பிரிந்து சென்ற ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணியில் இணைப்பது குறித்தும், சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, ஓபிஎஸ், டிடிவியை அதிமுகவில் இணைக்க முடியாது, என்டிஏ கூட்டணியில் வேண்டுமென்றால் சேர்த்து கொள்ளுங்கள்.
அவர்களை கூட்டணியில் இணைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று எடப்பாடி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அமித்ஷா உத்தரவின்பேரில் பேச்சுவார்த்தைக்கு சென்ற நிலையில் எடப்பாடி மீண்டும் அதே பதிலே அளித்து உள்ளதால் நயினார் மற்றும் மேலிடம் பொறுப்பாளர் ஆகியோர் அதிருப்தியுடன் திரும்பி சென்று உள்ளனர்.
இதுதொடர்பாக அமித்ஷாவுக்கு நயினார் அறிக்கை அளிப்பார் என்று கூறப்படுகிறது. எடப்பாடி தொடர்ந்து பிடிவாதம் பிடிப்பதால் அதிருப்தியில் உள்ள அமித்ஷா, விரைவில் எடப்பாடியை வழிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார் என்று பாஜ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
* சந்திப்பு ஏன்? நயினார் விளக்கம்
எடப்பாடியை சந்தித்த பின் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம். இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. பகைவரும் இல்லை. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜ தலையிடாது. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை சந்திப்பது குறித்து பின்னர் தெரிவிப்பேன்.
அதிமுகவில் சிலர் விலகிச் சென்றதால், தேர்தலில் பின்னடைவு என கூற முடியாது’ என்றார். தொடர்ந்து, ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை அதிமுகவில் இணைக்க மாட்டேன் என எடப்பாடி தெரிவித்து விட்ட நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர்கள் இணைவார்களா? என்ற கேள்வியை, ‘அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் தான் கூட்டணியில் இருந்து வெளியில் சென்றார்கள். பாஜ எந்த கட்சியின் உள்விவகாரங்களிலும் தலையிடாது’ என்றார்.