டெல்லியில் பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்திய பொதுப்பணித் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: டெல்லியில் பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்திய பொதுப்பணித் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே உள்ள பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த தொழிலாளர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளனர். பாதாள சாக்கடை குழிக்குள் இறங்கி சுத்தப்படுத்த தொழிலாளர்களை பயன்படுத்தியதால் ரூ.5 லட்சம் அபராதத் தொகையை தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணைத்துக்கு வழங்க உத்தரவிட்டது.
மேலும், பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த ஒரு சிறுவனையும் டெல்லி பொதுப்பணித்துறை பயன்படுத்தியதற்கும் , பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி தொழிலாளர்களை சாக்கடை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தியதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதே தவறு மீண்டும் தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. பொதுப்பணித்துறையின் செயல்பாடு 2023 அக்டோபர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் செயல் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.