டெல்லி கலவர வழக்கு; செயற்கை சாட்சியங்கள், ஆதாரங்கள் மூலம் 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்: விசாரணை நீதிமன்றங்கள் தகவல்
டெல்லி: டெல்லி கலவர வழக்கில் புனையப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பலர் விடுதலை செய்யப்பட்டிருப்பதை விசாரணை நீதிமன்றங்கள் வெளிப்படுத்தி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி மாதம் டெல்லி வடகிழக்கு பகுதியில் கலவரம் நடைபெற்றது. நாட்டையே உலுக்கிய கலவரத்தில் இஸ்லாமியர்கள் 40 பேரும், இந்துக்கள் 13 பேரும் என 53 பேர் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர் பலரது வீடுகள், கடைகள், உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டன.
தலைநகரத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்குகள் டெல்லி நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் நிலையில் வழக்குகளில் விடுதலை செய்யப்பட்ட பலர் புனையப்பட்ட ஆதாரங்கள் பொய் சாட்சியங்கள் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போராட்டம், கலவரம், சட்டத்திற்கு புறம்பாக ஒன்று கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட 695 வழக்குகளில் கடந்த மாதம் வரை 116 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றில் 97 பேர் விடுதலை செய்யப்பட்டும் 19 பேர் குற்றவாளிர்கள் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட 97 பேரில் 17 பேரின் வழக்குகளில் காவல்துறை விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் முறைகேடுகள் உள்ளதாக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் வெளிப்படுத்தி உள்ளன. 12 வழக்குகளில் போலீசார் செயற்கையான சாட்சியங்களையும் ஆதாரங்களையும் உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இரு வழக்குகளில் போலீசார் கூற சொன்ன சாட்சியங்களை சாட்சிகள் அளித்துள்ளதாகவும் மற்றும் பல வழக்குகளில் நீதியை நிலைநாட்டுவதற்கு மாறாக வழக்கு விரைந்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஒரு வழக்கில் வழக்கு ஆவணங்களை முறைகேடாக சமர்பிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளது. இவ்வாறான விடுதலைகளால் விசாரணை மற்றும் நீதி பரிபாலனத்தில் மீது மக்கள் நம்பிக்கையை இழப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.