போதிய ஈரப்பதத்துடன் கூடிய மேகக் கூட்டங்கள் இல்லாததால் செயற்கை மழை திட்டத்தை நிறுத்தி வைத்தது டெல்லி அரசு !!
டெல்லி : செயற்கை மழை பெய்ய வைக்கும் திட்டத்தை டெல்லி அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்தது. டெல்லியில் குளிர் காலத்தில் காற்று மாசுவின் அளவு உச்சத்தை தொடும். ஆண்டுதோறும் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக குளிர்காலத்தில் காற்றில் கலந்துள்ள அடர்த்தியான காற்று மாசுவை கலைப்பதற்காக செயற்கை மழையை பெய்விக்க டெல்லி அரசு திட்டமிட்டது. இதையடுத்து, செயற்கை மழையை உருவாக்க டெல்லி பாஜக அரசு, கான்பூரில் உள்ள ஐஐடியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று சாதகமான வானிலை தென்பட்டதால், மேக விதைப்பு சோதனை நடத்தப்பட்டது.
உத்தர பிரதேசம் கான்பூரில் இருந்து செஸ்னா ரக விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. சுமார் 6,000 அடி உயரத்தில் பறந்த இந்த விமானம், டெல்லியின் புராரி, விஹார், கரோல் பாக் உள்ளிட்ட இடங்களில் திரண்டிருந்த மேகங்கள் மீது சில்வர் அயோடைடு, சோடியம் குளோரைடு, பொட்டாசியம் அயோடைடு ஆகிய ரசாயனங்கள் தெளிக்கப்பட்டன. இருந்தாலும் மழை பொழியவில்லை. மொத்தம் மூன்று முறை இவ்வாறு மேக விதைப்பு முயற்சி நேற்று மேற்கொள்ளப்பட்டது. மூன்று முறை முயற்சித்தும் மழை இல்லாத நிலையில், அரசு அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
டெல்லியில் செயற்கை மழையை பெய்விக்கும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. போதிய ஈரப்பதத்துடன் கூடிய மேகக் கூட்டங்கள் இல்லாததால் திட்டத்தை நிறுத்திவைப்பதாக டெல்லி அரசு அறிவிப்பு வெளியிட்டது. செயற்கை மழைக்குத் தேவையான ஈரப்பதம் 50 விழுக்காடு இருக்க வேண்டும். ஆனால் டெல்லியில் 15 முதல் 20 சதவீதம் ஈரப்பதத்துடன் கூடிய மேகக் கூட்டங்கள் மட்டுமே உள்ளதால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.