டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது
டெல்லி: டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. மேலும் 24 பேர் படுகாயம் அடைந்து 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இறந்த நிலையிலேயே 8 பேரின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. கார் குண்டு வெடிப்பு சம்பவத்தால் டெல்லி செங்கோட்டை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து என்.எஸ்.ஜி. மற்றும் என்.ஐ.ஏ. அமைப்புகள் உடனடியாக விசாரணையை தொடங்கி உள்ளன. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை சேகரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தின் நுழைவு வாயில் 1 (கேட் 1) அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் இன்று மாலை 6.30 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பயங்கர சப்தத்துடன் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் வெடித்துச் சிதறிய காருக்கு அருகில் இருந்த மேலும் 4 கார்களும் தீப்பற்றி எரிந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் முதல்கட்டமாக 8 பேர் இறந்தனர். செங்கோட்டை அருகே நிகழ்ந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தையடுத்து தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதி, மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்தில் டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக காவல்துறை ஈடுபட்டுள்ளனர். எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டாலும் தீவிர கண்காணிப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரயில்வே காவல் துறையினர், பாதுகாப்புப் படை அதிகாரிகள் இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள, சிசிடிவி பதிவுகளை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து மும்பையில், முக்கிய இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்