டெல்லியில் மஹிபால்பூரில் மீண்டும் பயங்கர வெடிசத்தம்
புதுடெல்லி: டெல்லியில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், மஹிபால்பூரில் பயங்கர வெடிசத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டெல்லியில் கடந்த 10ம் தேதி நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக என்ஐஏ குழு அமைத்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் டாக்டர்கள் போன்ற உயர்நிலையில் உள்ளவர்களுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.
மேலும், இது தொடர்பாக அடுத்தடுத்து சிக்கி வரும் டாக்டர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டெல்லியில் 8 இடங்களில் இதுபோன்று காரில் வெடிபொருட்களை நிரப்பி தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், டெல்லி மஹிபால்பூரில் உள்ள ரேடிசன் ஓட்டல் அருகே இன்று பயங்கர வெடிசத்தம் கேட்டுள்ளது. காலை 9.18 மணியளவில் தீயணைப்பு துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்தன.
போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது நடத்தப்பட்ட சோதனையில், மர்ம பொருள் ஏதும் தென்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சத்தம் தொடர்பாக அங்கிருந்த உள்ளூர் மக்களிடம் விசாரித்தபோது, டெல்லி அரசு பஸ்ஸின் டயர் வெடித்த சத்தம்தான் அது என்று கூறியுள்ளனர்.