டெல்லியில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கியது: இன்று முடிவு எட்டப்படுமா?
புதுடெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையேயான 2 நாள் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீத வரியும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக மேலும் 25 சதவீத வரியும் உட்பட 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதனால், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா, அமெரிக்கா பிரதிநிதிகள் இதுவரை 6 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையேயான 2 நாள் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில், வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால், அமெரிக்க துணை வர்த்தக பிரதிநிதி ரிக் ஸ்விட்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு வர்த்தகம் தொடர்பாக இரு தரப்பிலும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகவும், இந்த சந்திப்பு பரஸ்பர நன்மை அளிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதை நோக்கமாக கொண்டிருப்பதாகவும் ஒன்றிய வணிக துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இன்று 2வது நாளாக இப்பேச்சுவார்த்தை தொடர்கிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக ஒப்பந்தத்தை பொறுத்த வரையில், விவசாயப் பொருட்கள் மற்றும் தொழில்துறைப் பொருட்களுக்கு வரிச் சலுகைகளை அமெரிக்கா கோருகிறது. வேளாண் மற்றும் பால் துறைகளில் எந்தவொரு சலுகைகளையும் வழங்க இந்தியா மறுப்பதால் தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவி வருகிறது.
இறங்கி வந்தது இந்தியா
முன்னதாக வாஷிங்டனில் பேசிய அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர், ‘‘அமெரிக்காவில் விளையும் சில பயிர் வகைகள், இறைச்சி, சோளம், சோயாபீன்ஸ், கோதுமை, பருத்தி உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கு இந்தியாவில் வரிச்சலுகை வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்னையில் தீர்வு காண்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இப்போது அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவிடமிருந்து அமெரிக்கா சிறந்த சலுகைகளை பெற்றுள்ளது. எனவே இது ஒரு சாத்தியமான மாற்று சந்தையாக இருக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.