டெல்லி, குருகிராம் கலகலத்தது 2 மணி நேர மழைக்கு 20 கி.மீ டிராபிக் ஜாம்: காங்கிரஸ் விளாசல்
புதுடெல்லி: டெல்லி மற்றும் குருகிராமில் 2 மணி நேரம் பெய்த கனமழைக்கு 20 கிமீ டிராபிக் ஜாம் ஆனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 48 மணி நேரம் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, குருகிராம் நகரம் ஸ்தம்பித்தது. டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள இப்கோ சவுக் போன்ற முக்கியப் பகுதிகளில் பல கிலோமீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா அளித்த பேட்டியில், ‘2 மணி நேர மழைக்கு 20 கி.மீ. போக்குவரத்து நெரிசல்’ என்று குறிப்பிட்டு, முதல்வர் விமானத்தில் பயணிப்பதால் மக்களின் துயரம் அவருக்குத் தெரியவில்லை என்று விமர்சித்துள்ளார். 48 மணி நேரம் தாண்டியும் குருகிராமில் கனமழை பெய்து வருவதால் மக்கள் திணறி வருகிறார்கள். காதர்பூர் கிராமத்திற்கு அருகிலுள்ள ஆரவல்லி அணை இடிந்து விழுந்து வெள்ளம் கிராமங்களுக்குள் பாய்ந்துள்ளது. இதனால் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.