டெல்லி அரசின் திட்டப்படி செயற்கை மழையை உருவாக்க கான்பூரில் உள்ள ஐஐடியுடன் ஒப்பந்தம்!!
டெல்லி: காற்று மாசு குறைக்க டெல்லி அரசு செயற்கை மழையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. டெல்லி அரசு திட்டப்படி செயற்கை மழையை உருவாக்க கான்பூரில் உள்ள ஐஐடியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கான்பூரில் உள்ள ஐஐடி குழுவினர் செயற்கை மழையை உருவாக்க தயாராக உள்ளனர். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கைகளை கான்பூரில் ஐஐடி குழு கையாளும் என டெல்லி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேகங்களில் சில்வர் அயோடைட் ரசாயனத்தை தெளித்து செயற்கை மலையை உருவாக்க சிறப்பு கருவிகள் பொருத்தப்பட்ட செஸ்னா 206H ரக விமானம் ஒன்று தயார் நிலையில், வைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் செயல்பாடுகள் மற்றும் ரசாயனத்தை தெளிக்கும் சிறப்பு கருவிகள் செயல்பாடு ஆகியவை ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை ஐந்து முறை சோதனை ஓட்டம் நடைபெற்றகாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை மேகங்களை கணிக்க இரண்டு மாதங்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையத்தை டெல்லி அரசு தொடர்புகொண்ட இருந்தது.
அதன் தொடர்ச்சியாக வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக மழைக்கான சூழலை கண்காணித்து வருகிறது. செயற்கை மழைக்கு ஏற்றவகையில் டெல்லிக்கு அருகே மழை மேகங்கள் வரும்போது, வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே அரசுக்கு தகவல் தெரிவிக்கும். அதன் அடிப்படியில் டெல்லி அரசு கான்பூர் ஐஐடி குழுவை தொடர்பு கொள்ளும். குறிப்பிட்ட நேரத்திற்குள் ரசாயனத்தை மேகங்களில் தெளித்து செயற்கை மழையை உண்டாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை மழை மேகங்கள் டெல்லி அருகே வராததால் டெல்லி அரசின் செயற்கை மழை திட்டம் காத்திருப்பில் உள்ளது. தென்மேற்கு பருவமழை ஏற்கனவே முடிந்துவிட்டதால் எப்போதும் மழை மேகங்கள் டெல்லி அருகே வரும் என்பதை உடனடியாக கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று முறை செயற்கை மழையை உருவாக்கினால், காற்றில் உள்ள மாசு குறையும் என கருதப்படுகிறது.