டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல்: ஒருவர் கைது; பாஜகவினர் அதிர்ச்சி!
டெல்லி: டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று காலையில் சிவில் லைன்சில் உள்ள தனது இல்லத்தில் மக்கள் குறை கேட்கும் நிகழ்வில், மக்களிடம் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், முதலமைச்சர் ரேகா குப்தாவிடம் சில ஆவணங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் திடீரென, ரேகா குப்தாவை தாக்கினார். இதனால் அங்கு பெரும் குழப்பம் நிலவியது. இதில் ரேகா குப்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ரேகா குப்தாவை தாக்கிய நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி முதல்வரை தாக்கிய ராஜேஷ் பாய் கிம்ஜி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ரேகா குப்தா தாக்கப்பட்டதாக டெல்லி பாஜக போலீசார் புகார் அளித்தது. ராஜேஷ் பாய் கிம்ஜி என்பவர் மனு கொடுப்பது போல் டெல்லி முதல்வர் வீட்டுக்கு வந்து ரேகா குப்தாவின் கன்னத்தில் அறைந்து, அவரது முடியை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். மூத்த தலைவரான ரேகா குப்தா தாக்கப்பட்டது பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லி முதல்வர் தாக்கப்பட்டது பாதுகாப்பு குறைபாடே காரணம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் தோல்வி என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றச்சாட்டியுள்ளார்.