டெல்லியில் கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
டெல்லி: டெல்லியில் கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல்காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதே நேரம் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பதினருக்கும், நண்பர்களுக்கும் தமது இரங்கலை தெரிவித்துகொள்வதாக கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய தாம் பிராத்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கார் வெடிப்பில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விருப்பம் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமையை தான் ஆய்வு செய்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டெல்லி சம்பவம் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களுக்காக தமது வேதனையை வெளிபடுத்தியுள்ள கார்கே, கார் வெடித்த சம்பவத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
நெஞ்சத்தை உடைக்கின்ற மற்றும் கவலையளிக்கின்ற செய்தி என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்த துயர சம்பவத்தில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த வேதனையை அளிப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி கார் வெடிப்பில் பல அப்பாவி உயிர்கள் இறந்திருப்பது அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியிருப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிகழ்விடத்தில் பதிவான காட்சிகள் இதயத்தை உடைப்பதாக உள்ளதாக கூறியுள்ள அவர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இதயப்பூர்வ இரங்கலை தெரிவித்துகொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
கார் வெடிப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஃபரிதாபாத்தில் வெடிபொருள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது நமது நாடு எதிர்கொண்டுள்ள எதிர்கொள்ளும் கடுமையான அச்சுறுத்தல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
நமது நாட்டு மக்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சாடியுள்ளார். இந்த துயரமான சமயத்தில் டெல்லி மக்களுடன் கேரளம் உறுதியான ஒற்றுமையுடன் உள்ளது என பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.
கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களுன் குடும்பங்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன்பட்நாயக், சதீஸ்கர் மாநில முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.