டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு; ‘இது தற்கொலை தாக்குதல் அல்ல... தியாகம்’: தீவிரவாதி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
புதுடெல்லி: செங்கோட்டை குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதி, தனது செயலை நியாயப்படுத்தி பேசிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் செங்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட கோர குண்டுவெடிப்புத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்டவர் டாக்டர் உமர் நபி என அடையாளம் காணப்பட்டார். இந்நிலையில், அவர் தாக்குதலுக்கு முன்னர் பதிவு செய்ததாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ, தேசிய புலனாய்வு முகமை மற்றும் டெல்லி காவல்துறை போன்ற விசாரணை அமைப்புகளுக்கு ஆதாரமாக சிக்கியுள்ளது.
இது தீவிரவாத அமைப்புகளின் நீண்டகால திட்டமிடலையும், உமர் எந்த அளவிற்கு தீவிரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார் என்பதையும் அம்பலப்படுத்துவதாக அதிகாரிகள் கருதுகின்றனர். அந்த வீடியோவில் தனது செயலை நியாயப்படுத்திப் பேசியுள்ள உமர், ‘சாதாரணமாக தற்கொலைப்படைத் தாக்குதல் என்று அழைக்கப்படுவது தற்கொலை அல்ல; அது கொள்கைக்காக செய்யப்படும் தியாகச் செயல்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ, இளைஞர்களைத் தவறான பாதைக்குத் திசைதிருப்பி, தீவிரவாத சித்தாந்தங்களுக்கு ஆள்சேர்க்கும் பிரசார கருவியாகப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், இந்த வீடியோ முக்கிய சாட்சியமாகப் பார்க்கப்படுகிறது.