டெல்லி கார் குண்டுவெடிப்பில் திடுக் தகவல்; பல்கலைக்கழகத்தில் 200 மருத்துவர்கள், ஊழியர்களிடம் விசாரணை: முகாம் போட்டு என்ஐஏ, ஈடி, டெல்லி காவல்துறை கிடுக்கிப்பிடி
பரிதாபாத்: டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பலர் பணியாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில் தற்கொலைப்படை தீவிரவாதியாக சந்தேகிக்கப்படும் டாக்டர் உமர் உன் நபி, இந்த பல்கலைக்கழக மருத்துவமனையில் முன்னாள் பேராசிரியராக பணியாற்றியவர் ஆவார். அவருடன் கைது செய்யப்பட்ட டாக்டர் முஜாமில் ஷகீல் மற்றும் டாக்டர் ஷஹீன் ஷாஹித் ஆகியோரும் இங்கு பணியாற்றியவர்களே ஆவர். இவர்களில், முஜாமில் ஷகீல் என்பவரது இருப்பிடத்தில் இருந்து சுமார் 2,900 கிலோ வெடிமருந்து தயாரிக்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இதற்கு முன்னர், 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய நபரான மிர்சா ஷதாப் பெய்க், இந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தற்போது விசாரணை அமைப்புகளின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதனிடையே, பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான ஜவாத் அகமது சித்திக்கை, 415 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை, டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு உள்ளிட்ட பல விசாரணை அமைப்புகள் பல்கலைக்கழகத்தில் தற்காலிக கட்டுப்பாட்டு மையத்தை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளன. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகு திடீரென விடுப்பு எடுத்தவர்கள், பல்கலைக்கழகத்தை விட்டு விலகியவர்கள் மற்றும் தங்கள் அலைபேசி தரவுகளை அழித்த ஊழியர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவர்கள், மாநிலங்களுக்கு இடையேயான மருத்துவ கவுன்சிலின் முறையான அனுமதி பெறாமலேயே பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை மாணவர்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.