டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கியுள்ள பல்கலைக்கழகம் தொடர்பான 25 இடங்களில் ‘ஈடி’ ரெய்டு: கைதானவர்கள் ‘ஹமாஸ்’ பாணி தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்
புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கியுள்ள பல்கலைக்கழகம் தொடர்பான 25 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வரும் நிலையில், கைதான நபர்கள் ‘ஹமாஸ்’ பாணி தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த 10ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தீவிரப்படுத்தியுள்ளது. இந்த விசாரணையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலைப் போன்று, இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. ‘டி-6’ அல்லது ‘டெல்டா 6’ எனப் பெயரிடப்பட்டிருந்த இந்த சதித்திட்டத்தின் கீழ், கோயில்கள், மருத்துவமனைகள் மற்றும் ராணுவத் தளங்களைக் குறிவைத்து வாகனங்களில் பொருத்தப்பட்ட வெடிகுண்டுகள், ராக்கெட்டுகள் மற்றும் ஆயுதமேந்திய ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்த வழக்கில், தற்கொலைப்படை பயங்கரவாதியான டாக்டர் உமர் உல் நபிக்கு வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை வாங்கிக் கொடுத்து உதவியதாகக் கூறப்படும் அமீர் ரஷித் அலி என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, 10 நாள் என்.ஐ.ஏ. காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டாவது முக்கிய குற்றவாளியான ஜசீர் பிலால் வானி என்கிற டேனிஷ் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று (நவ. 17) காஷ்மீரின் நகரில் கைது செய்தனர். இவர், தாக்குதலுக்காக ட்ரோன்களை மேம்படுத்துவதற்கும், ராக்கெட்டுகளை உருவாக்குவதற்கும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கிய தொழில்நுட்ப வல்லுநர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பயங்கரவாதியின் பயணப் பாதையை கண்டறிய, முக்கிய பிரமுகர்கள் செல்லும் சாலைகளில் உள்ள 40 கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள், வெடிபொருட்களை ‘மருந்து’ என்றும், தாக்குதல்களை ‘ஆபரேஷன்கள்’ என்றும் பயங்கரவாதிகள் பயன்படுத்திய ரகசிய குறியீட்டு வார்த்தைகளையும் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் சிக்கிய அரியானா அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் மீதான பிடி இறுகியுள்ளது. இந்த பல்கலைக்கழகம் மீது ஏற்கனவே மோசடி, போலி அங்கீகாரம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன.
இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) ஆகியவை முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியிருந்தன. மேலும், இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம் (ஏஐயு), இந்த பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் தகுதியை இடைநீக்கம் செய்தது. டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினரும் மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது விசாரணை தீவிரமடைந்துள்ளது. அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, டெல்லி மற்றும் ஃபரிதாபாத்தில் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய 25 இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தியது. இதற்கிடையே, பல்கலைக்கழக நிறுவனர் ஜாவத் அகமது சித்திக்கியின் சகோதரர் ஹமூத் சித்திக்கியை, 25 ஆண்டுகள் பழமையான நிதி மோசடி வழக்கில் மத்தியப் பிரதேச காவல்துறையினர் நேற்று ஐதராபாத்தில் கைது செய்தனர்.
‘இந்த மோசடிப் பணம் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியாகப் பயன்படுத்தப்பட்டதா’ என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், நிதி முறைகேடுகள், போலி ஆவணங்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புடனான தொடர்பு குறித்து பல்கலைக்கழகத் தலைவர் ஜாவேத் அகமது சித்திக்கியிடம் விசாரணை நடத்த டெல்லி காவல்துறை இரண்டு முறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இணைந்து தவுஜ், நுஹ் போன்ற பகுதிகளில் தொடர்ந்து நடத்தி வரும் சோதனைகளில், நிதி உதவி செய்ததாகக் கூறப்படும் ரிஸ்வான், ஷோயிப் என்ற மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத் தேர்வுகள் நெருங்கும் வேளையில், இந்த தொடர் விசாரணைகளால் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அச்சத்திலும், பீதியிலும் ஆழ்ந்துள்ளனர்.