டெல்லியில் அமித்ஷா, நட்டாவுடன் உயர்மட்ட குழு ஆலோசனை; அண்ணாமலை 2வது நாளாக தியானம்: உடுப்பி சாமியாருடன் சந்திப்பு
சோளிங்கர்: தமிழக பாஜ மாநில தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், முக்கிய பதவி வழங்கப்படாததால், அவர் கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலை மாற்றப்பட்டதற்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்திருந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜ நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்காத நிலையில், அவரை நிர்மலா சீதாராமன் கடுமையாக சாடினார். இதனால் பாஜவில் கோஷ்டி பூசல் பூதாகரமானது. நிர்மலா சீதாராமன் பேச்சால் ஆத்திரமடைந்த அண்ணாமலை ஆதரவாளர்கள், தேர்தலில் அண்ணாமலையை விட ஒரு ஓட்டு அதிகமாக நிர்மலா சீதாராமனால் வாங்க முடியுமா என்று சவால் விட்டனர்.
இதுதொடர்பாக அண்ணாமலை, டெல்லியில் மேலிடத்திடம் புகார் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாஜ அகில இந்திய தலைவர் தலைவர் ேஜ.பி.நட்டா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நேற்று டெல்லியில் தமிழக பாஜ உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். ஆனால் அண்ணாமலை நேற்று டெல்லிக்கு செல்லவில்லை. கடந்த சில நாட்களாக கடும் விரக்தியில் உள்ள அண்ணாமலை, கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்துவிட்டு, கோயில்களுக்கு படையெடுத்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அண்ணாமலை, நேற்று முன்தினம் மாலை ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கருக்கு சென்றார். அங்கு மலையடிவாரத்தில் உள்ள உடுப்பி அத்மார் மடத்திற்கு சென்று ஏஷபிரிய தீர்த்த சுவாமியிடம் ஆசி பெற்றார். இதையடுத்து அங்கு 5 மணி நேரம் தியானம் மேற்கொண்டார். பின்னர் 406 படிகள் கொண்ட சிறிய மலை யோக ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் மலையடிவாரத்தில் தங்கினார்.
தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று அதிகாலை 1305 படிகள் கொண்ட பெரிய மலை யோக லட்சுமி நரசிம்மர் மலைக் கோயிலுக்கு படிகள் வழியாக நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்து 1 மணி நேரம் தியானம் மேற்கொண்டார். பின்னர் யோக நரசிம்மர் மற்றும் அமிர்தவல்லி தாயார் சன்னதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோயில் சார்பில் வஸ்திரம், மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதையடுத்து, ரோப்காரில் மலையிலிருந்து இறங்கி வந்தார். தொடர்ந்து பேட்டி எதுவும் கொடுக்காமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். நேற்று டெல்லியில் தமிழக பாஜ உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், அண்ணாமலை கோயிலில் தியானம் மேற்கொண்ட சம்பவம் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.