டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு..கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாதிப்பு: அவதியில் மக்கள்..!!
டெல்லி: மிக மோசமான காற்றின் தரத்தை பதிவு செய்துள்ளது டெல்லி. தலைநகர் டெல்லியில் காற்று மிக பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசுவின் அளவு உச்சத்தை தொடும். ஆண்டுதோறும் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த காற்று மாசு பிரச்சனைக்கு டெல்லி அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், காற்று மாசை குறிக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டது. அவ்வகையில் டெயில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க உத்திர பிரதேசம் கான்பூரில் உள்ள ஐஐடி உடன் டெல்லி அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காற்றில் போதிய ஈரப்பதம் இல்லாததால் செயற்கை மழை முயற்சி நிறுத்தி வைக்கப்படுவதாக கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி அன்று டெல்லியில் காற்று தரக்குறியீடு 359ஆக பதிவானது. ஆனால் இந்த ஆண்டு 450ஐ கடந்தது. இது தேசிய சராசரியை விட 1.8 மடங்கு அதிகமாகும். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காற்றின் தரக்குறியீடு 370ஆக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி காற்று தரக்குறியீடு மிக மோசமான 459ஆக பதிவாகியுள்ளதாக இந்தியாவின் மாசுக்கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு வாழும் மக்களுக்கு சுவாச கோளாறு, மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.