கால தாமதமே நெரிசலுக்கு காரணம்: சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு வள்ளியூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கரூரில் நடந்த துயரச் சம்பவம் மனதை மிகவும் பாதிக்கிறது. இச்சம்பவத்திற்கு காவல்துறை மீது பழி சுமத்துவது முற்றிலும் தவறானது. இதுகுறித்து பொறுப்பு டிஜிபி தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். அவர்கள் மீது குற்றம் கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது. விழாவுக்கான நேரம் காலை 8:45 மணி மற்றும் 12 மணி என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நடிகர் விஜய் சென்னையிலிருந்து காலை 8:30 மணிக்கு புறப்பட்டு, முதல் நிகழ்ச்சிக்கு மதியம் 2 மணிக்கும், இரண்டாவது நிகழ்ச்சிக்கு இரவு 7:50 மணிக்குமே வந்திருக்கிறார். பொதுவாக, அரசியல் தலைவர்கள் கூட்டம் அதிகம் சேர வேண்டும் என்பதற்காக கால தாமதமாக வருவது வழக்கம். இது இயற்கையாக நடந்ததா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பது விசாரணை ஆணையத்தின் மூலம்தான் தெரியவரும்.
இருப்பினும், இவ்வளவு பெரிய காலதாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்த சம்பவத்தால் எல்லோருடைய கண்ணிலும் கண்ணீர் வழிகிறது. ஒரு அரசியல் கட்சி நடத்தும் கூட்டத்தில் இப்படி ஒரு சோகம் நடந்தது மிகவும் வேதனையளிக்கிறது. இது போன்ற சம்பவங்கள் இனி ஒருபோதும் உலகில் எங்கும் நடக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.