ஆதிவாசி மக்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் தாமதம்
*முன்னாள் எம்எல்ஏ ஆய்வு
பந்தலூர் : பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள அரசு வீடுகளை முன்னாள் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா எழுவது செட் பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு அரசு வீடுகள் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது.
அந்த வீடுகளில் தற்போது மக்கள் குடியிருந்து வருகின்றனர். ஆனால் இதுநாள் வரைக்கும் அந்த வீடுகளுக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி, நடைபாதை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் இருப்பதால் மக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
யானை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளி குழந்தைகள் படிக்க முடியாமல் மண்ணெண்ணெய் விளக்குகளை வைத்து படிக்கின்றனர்.
இந்நிலையில் ஆதிவாசி மக்களின் சிரமம் குறித்து தினகரன் நாளிதழில் கடந்த 8ம் தேதி செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து, முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி அப்பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் மக்களிடம் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.