மான் வேட்டையாட முயன்ற ஏட்டு கைது துப்பாக்கி பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூர்: மான் வேட்டையாட முயன்ற ஏட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வனப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரேஞ்சர் செல்வமணி தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் நடமாடிய 3 பேர் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவர் மட்டும் சிக்கினார். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். விசாரணையில், சிக்கியவர் மம்சாபுரத்தை சேர்ந்த தனுஷ்கோடி (40) என்பதும், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. மேலும், மான் வேட்டையாடுவதற்காக துப்பாக்கியுடன் நடமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த வனத்துறையினர், நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.