அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம்
தமிழ்நாட்டில் தூய்மைப்பணியாளர்கள் நலனை காக்கும் வகையில் நலவாரியம் அமைக்கப்பட்டு அதன் மூலம் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. வாரியம் மூலம் உறுப்பினர்களுக்கு மகப்பேறு உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, ஓய்வூதியம், நிவாரணத் தொகை மற்றும் அரசு காப்பீட்டுத் திட்டங்கள் என பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. நாளும் நம் நகரங்கள் இயங்க வெயில், மழை, புயல், வெள்ளம் என எந்த பேரிடர் வந்தாலும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்பதோடு, என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியதோடு 6 புதிய திட்டங்களையும் அறிவித்திருந்தார்.
அதன்படி, தூய்மைப் பணியாளர்களின் நலன் காத்திடவும், அவர்களின் சமூக பொருளாதார நிலையினை உயர்த்திடவும், தூய்மைப் பணியாளர்களின் தொழில்சார் நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் தனித்திட்டம், பணியின் போது உயிரிழக்கும் நிலை ஏற்பட்டால் ரூ. 10 லட்சம் நிதி பாதுகாப்பு, சுயதொழில் தொடங்குவதற்காக அதிகபட்சம் ரூ.3.50 லட்சம் வரை மானியம் மற்றும் கடன் தொகையை தவறாமல் திருப்பிச் செலுத்துவோருக்கு வட்டி மானியம், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக புதிய உயர் கல்வி உதவித் தொகை திட்டம், தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் உதவியோடு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டங்களின் கீழ், அடுத்த 3 ஆண்டுகளில் 30,000 வீடுகள் வழங்கும் வீட்டு வசதி திட்டம், பணியின் போது கட்டணமில்லா காலை உணவு வழங்கும் திட்டம் ஆகிய புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், காலை உணவு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்று வேளையும் கட்டணமில்லா உணவு வழங்கும் திட்டத்திற்கான அரசாணையை திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டமானது தூய்மைப் பணியாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தூய்மைப்பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவை சமைப்பதற்கும், அதை எடுத்து வந்து உண்பதற்கும் பல்வேறு பிரச்னைகள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்னைகளுக்கு தீர்வாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் இனி வழங்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு கொண்ட பணிக்கு ஊக்கமளிக்கும் வகையில் காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் கட்டணமில்லா உணவு வழங்கும் இந்த திட்டம் சமூக நீதி, மக்கள் நலன், கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவைகளில் இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்கள் வரிசையில் இந்த திட்டமும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.