இமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவுக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 199 ஆக அதிகரிப்பு!
இமாசல பிரதேசம்: இமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பு, வெள்ளம், நிலச்சரிவுக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது. இமாசல பிரதேசத்தில், பருவமழையையொட்டி பெய்து வரும் அதிகளவிலான மழையால் வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்றவை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேகவெடிப்புகளும் ஏற்பட்டு பாதிப்பை உண்டு பண்ணுகின்றன. இமாசல பிரதேசத்தில் கடந்த பல நாட்களாக பெய்து வரும் கனமழையில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம் தொடர்ச்சியாக, கால்நடைகள், வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நீர் விநியோக திட்டங்கள், சாலைகள், மின்சார உட்கட்டமைப்புகள், பள்ளிகள், சுகாதார நலன், விவசாயம் மற்றும் வீட்டு வசதி சார்ந்த விசயங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. 493 சாலைகள், 1,120 மின்மாற்றிகள் மற்றும் 245 நீர் விநியோக திட்டங்கள் பாதிப்படைந்து உள்ளன.
இமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புக்கு 199 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த உயிரிழப்புகள் ஜூன் 20 முதல் ஆகஸ்டு 6 வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்டவையாகும். வானிலை தொடர்பான உயிரிழப்புகளில் 17 பேர் மேகவெடிப்பாலும், 20 பேர் நீரில் மூழ்கியும், ஒருவர் மின்சாரம் தாக்கியும், 9 பேர் வெள்ளப்பெருக்கில் சிக்கியும் மற்றும் 6 பேர் நிலச்சரிவிலும் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் கீழே விழுந்தும், நெருப்பு, மின்னல் தாக்கியும் மற்றும் பிற மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, 91 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.