இந்தியாவில் அதிகரிக்கும் அபாயம்; ஆண்டுக்கு 2.50 லட்சம் பேர் கிட்னி செயலிழப்பால் இறப்பு: விழிப்புணர்வு மிகவும் அவசியம்
இயந்திர மயமாகி விட்ட இன்றைய வாழ்க்ைகச் சூழலில் சிறுநீரக பாதிப்புகள் என்பது பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவில் 7 கோடி மக்கள் நாள்பட்ட சிறுநீரக நோயோடு வாழ்கின்றனர். சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஆண்டுக்கு 2.50 லட்சம் பேர் இறப்பை தழுவி வருகின்றனர் என்று புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. இதேபோல் நாள்பட்ட சிறுநீரக பிரச்னையால் இந்தியாவில் இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 18 பேர் என்றும், தமிழகத்தில் ஆயிரத்திற்கு 35 பேர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. சிறுநீரகம் என்பது மனித உடலில் பெரும் முக்கியத்துவம் கொண்டது. நமது உடலில் உற்பத்தியாகும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது. நாம் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளில் நச்சுக்கள் இருந்தால் அவற்றையும் சிறுநீர் மூலமாக வெளியேற்றுகிறது. தினமும் நமது இரண்டு சிறுநீரகங்களும் மொத்தமாக 150, 180 லிட்டர் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கிறது. இப்படிப்பட்ட சிறுநீரகங்களின் பாதிப்பு அதிகரித்து வருவது உண்மையில் பெருத்த வேதனைக்குரியது. சிறுநீரக நோய் பாதிப்புகளை பொறுத்த வரையில் தொடக்கத்தில் இது எந்த அறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை. குழந்தைகளுக்கு கிரியாட்டினின் அளவு 2.0 மில்லி கிராமிற்கு அதிகமாகவும், பெரியவர்களுக்கு 5.0 மில்லி கிராமிற்கு அதிகமாகவும் இருந்தால் அவர்களது கிட்னி என்னும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். கட்டுப்படாத சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம், புகை பிடித்தல், மது அருந்துதல், சிறுநீரக தொற்றுகள், சிறுநீரக கற்கள், உடற்பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளின் பக்க விளைவு, உணவு நச்சுக்கள், புரோட்டஸ்ட் வீக்கம், புற்றுநோய் போன்றவை சிறுநீரகம் பாதிப்பதற்கான முக்கிய காரணங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதுகுறித்து சிறுநீரக சிகிச்சை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் மேலும் கூறியதாவது: சிறுநீரக பாதிப்புகள் என்பது ஒரு உலகளாவிய பிரச்னையாக உள்ளது. அதேநேரத்தில் இந்தியாவிலும், தமிழகத்திலும் இதன் பாதிப்புகள் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டு நோய் தடுப்புத்துறை சார்பில் சிறுநீரக பிரச்னைகள் தொடர்பான ஆய்வுகள் நடந்தது. இதில் பாதிப்புகள் அதிகம் இருக்கும் இடங்களை தேர்வு செய்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் நடந்த பரிசோதனையில் 9.5 சதவீதம் பேருக்கு ரத்தத்தில் கிரியாட்டின் அளவு அதிகம் இருப்பது தெரியவந்தது. 5.8 சதவீதம் பேருக்கு சிறுநீரில் ஆல்புமின் என்னும் புரதம் அதிகம் இருப்பதும் தெரியவந்தது. 7.7 சதவீதம் பேருக்கு சிறுநீரில் ரத்த சிவப்பணுக்கள் இருப்பதும் தெரியவந்தது. பரிசோதனையில் பங்கேற்ற 10 ஆயிரம் பேரில் 5ல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதன்படி தமிழகத்தில் 65 ஆயிரம் பேர், நாள்பட்ட சிறுநீரக பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 ஆயிரம் பேர் மாற்று சிறுநீரகம் மற்றும் டயாலிசிஸ் போன்ற உயர்சிகிச்சைகளுக்கு காத்திருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மூன்றில் 2 பேருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட ரத்தக்கொதிப்பும், சர்க்கரை நோயுமே முக்கிய காரணம் என்பதும் கண்டறியப்பட்டது.எனவே ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். புகையிலை, மதுபழக்கத்ைத தவிர்க்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் 45 நிமிடத்திற்கு நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். நாள் ஒன்றுக்கு உண்ணும் உப்பின் அளவு 2 முதல் 5 கிராமிற்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க ேவண்டும்.
இதுபோன்ற செயல்களை தொடர்ந்து மேற்கொண்டால் நாள்பட்ட சிறுநீரக பிரச்னைகளை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும்.சமீபத்தில் அமெரிக்காவில் சிறுநீரக பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். இதில் ஒருவருக்கு இறுதி கட்ட சிறுநீரக பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் நிலையில் 5 ஆயிரம் பேருக்கு ஆரம்ப கட்ட பாதிப்புகள் தொடங்குகிறது என்று தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவிலும், தமிழகத்திலும் இத்தகைய ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம். இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
சர்க்கரை, மாரடைப்புக்கு காரணம்
அகில இந்திய அளவில் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை 1000 பேருக்கு 132 பேர் என்ற ரீதியில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த எண்ணிக்கையின் அளவானது 1000 பேருக்கு 208 பேர் என்ற அளவில் உள்ளது. சர்க்கரை நோயால் இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கு 23 பேர் என்ற அளவில் உள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் சர்க்கரை நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு 53 என்ற அளவில் உள்ளது. இதன்படி மாரடைப்பு இறப்புகளும், சர்க்கரை நோய் இறப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், இவற்றின் மூலம் உருவாகும் சிறுநீரக பாதிப்புகளும் பெருத்த அபாயங்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. எனவே விழிப்புணர்வுடன் மக்கள் இருந்து மேற்கண்ட நோய்களின் பிடியில் சிக்குவதை முதலில் தவிர்க்க வேண்டும் என்பதும் மருத்துவ நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது.
முழுமை பாதிப்புக்கு மட்டுமே அறிகுறிகள்
‘‘நாம் குடிக்கும் தண்ணீரிலும், சாப்பிடும் உணவிலும் கால்சியம் பாஸ்பேட், ஆக்சலேட் என்னும் பல தாது உப்புகள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானம் ஆனபிறகு இவை அனைத்தும் சிறுநீரில் வெளியேறி விடும். சில சமயங்களில் இவற்றின் அளவு ரத்தத்தில் அதிகமாகும்போது தான் பிரச்னைகள் உருவாகும். ஆரம்பத்தில் இந்த உப்புக்கள் ரத்தத்தில் அதிகமாகும்போது சிறுநீரகம், சிறுநீரக குழாய், சிறுநீர் பை போன்ற இடங்களில் உப்பு படிகம் போல் படிந்து கல்போல் திரளும். இந்த கற்கள் தான் பிற்காலத்தில் சிறுநீரக பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். ஆரம்பத்தில் இதுசார்ந்த எந்த பாதிப்பும் தெரியாது. ஆனால் சிறுநீரகம் முழுமையாக பாதிக்கப்பட்டால் சிறுநீர் பிரிவது குறையும், பசி குறையும், வாந்தி வரும், தூக்கம் குறையும், கடுமையான சோர்வு, உடலில் அரிப்பு, முகம் மற்றும் கை, கால்களில் வீக்கம் தோன்றும்,’’ என்பது அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் எச்சரிக்கை.