போலீஸ் தாக்கியதில் பலி; அஜித்குமார் வழக்கில் 17ம் தேதி முதல் விசாரணை
மதுரை: மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கின் விசாரணை, மதுரை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வரும் 17ம் தேதி முதல் விசாரணை நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (28), போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு மற்றும் சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சிபிஐ தரப்பில் ஆன்லைன் மூலம் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 5 தனிப்படை காவலர்கள் மற்றும் டிரைவர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி தலைமை குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அஜித்குமார் மரண வழக்கை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது குறித்து முடிவெடுப்பது தொடர்பான மனு நேற்று, மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.சிவகடாட்சம் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அஜித்குமார் மரண வழக்கின் விசாரணையை, மதுரை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். அதன்படி வரும் 17ம் தேதி முதல் அஜித்குமார் மரண வழக்கின் விசாரணை, மதுரை 5வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து சாட்சியங்கள் பதிவு, குறுக்கு விசாரணை உள்ளிட்ட நடைமுறைகள் நடைபெறும். வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்படும். குறுகிய காலத்தில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.