காவல்துறையின் புலனாய்வில் பெரும் குளறுபடி; தமிழ்நாட்டை சேர்ந்தவரின் தூக்கு தண்டனை ரத்து: ‘டிஎன்ஏ’ மாதிரி பிழை குறித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி
புதுடெல்லி: காவல்துறையின் புலனாய்வில் பெரும் குளறுபடி நடந்துள்ளதால் தமிழ்நாட்டை சேர்ந்தவரின் தூக்கு தண்டனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ‘டிஎன்ஏ’ மாதிரி பிழை குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த கட்டவெள்ளை என்கிற தேவகர் என்பவர் மீது 2011ம் ஆண்டு தொடரப்பட்ட கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில், கடந்த 2018ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் நேரடி சாட்சிகள் இல்லாத நிலையில், சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், போலீசாரின் புலனாய்வில் நடந்த கடுமையான தவறுகளைச் சுட்டிக்காட்டி தீர்ப்பை ரத்து செய்துள்ளது.
குறிப்பாக, இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாகக் கருதப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டதிலும், ‘சீல்’ வைக்கப்பட்டதிலும், பாதுகாக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதிலும் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை உச்ச நீதிமன்றம் கண்டறிந்தது. மேலும், இந்தத் தண்டனைக்கு எந்தவிதமான வலுவான ஆதாரமும் இல்லை என்று கூறி, கட்டவெள்ளையை உடனடியாக விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீசார் செய்த குளறுபடியால், ஒருவர் பல ஆண்டுகளாக சிறையில் வாடிய அவலத்தையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த வழக்கில் வெளிப்பட்ட புலனாய்வுத் தவறுகள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் நோக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, நாடு தழுவிய அளவில் புதிய வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளது.
இதன்படி, இனிமேல் குற்ற வழக்குகளில் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கும்போது, வழக்கு எண், சட்டப் பிரிவுகள், புலனாய்வு அதிகாரி விவரங்கள் ஆகியவற்றுடன் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் 48 மணி நேரத்திற்குள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். மேலும், ஆதாரம் சேகரிக்கப்பட்டது முதல் வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை, அது யாரிடம் இருந்தது, எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பதைப் பதிவு செய்யும் சான்றுகளின் பாதுகாப்பு தொடர் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். இந்த விதிகளை முறையாகப் பின்பற்றத் தவறினால், சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரியே பொறுப்பாவார் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்த வழிகாட்டுதல்களை அனைத்து மாநில டிஜிபிக்களுக்கும், உயர் நீதிமன்றங்களுக்கும் அனுப்பி, காவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிக்காட்டல் நெறிமுறைகள், இந்திய குற்றப் புலனாய்வு நடைமுறைகளில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.