தமிழகத்தில் திட்டமிட்டபடி டிச.4ம் தேதிக்குள் முடிக்கப்படும்; எஸ்ஐஆர்க்கு காலக்கெடு நீடிப்பு இல்லை: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உறுதி
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி டிசம்பர் 4ம் தேதி முடிக்கப்படும். கூடுதல் அவகாசம் கொடுக்க வாய்ப்பில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார். தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் (எஸ்ஐஆர்) துவங்கி நடைபெற்று வருகிறது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை அளித்து வருகிறார்கள். இதுவரை 98 சதவீதம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டாலும், 50 சதவீதத்துக்கும் குறைவான விண்ணப்பங்களே திரும்ப பெறப்பட்டுள்ளது. காரணம், விண்ணப்பங்களை எப்படி நிரப்ப வேண்டும் என தெரியாமலும், அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்களை பெற முடியாமலும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு, அரசியல் கட்சியினர் உதவி செய்து வருகிறார்கள்.
இந்த நிலயில், 2026ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு நேற்று வந்தனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த பி.பவன், துணை இயக்குநர் மற்றும் தேவன்ஷ் திவாரி ஆகியோர் நேற்று முதல் 26ம் தேதி வரை சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கட்டம்-II குறித்த ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்ய இருக்கிறார்கள். மேலும் கூடுதலாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி, சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து, குறிப்பாக மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் மற்றும் அதன் டிஜிட்டல் முறை உள்ளீடு குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு பணிகளை செய்தார்.
இதேபோல், மதுசூதன் குப்தா சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சில தொகுதிகளுக்கு நேற்று நேரில் சென்று சிறப்பு தீவிர திருத்தம் பற்றி ஆய்வு செய்தனர். இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தொடர்பாக சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களில் 6.16 கோடி வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் 50% வரை திரும்பப் பெறப்பட்டுள்ளன. எந்த விசாரணையும் இன்றி வாக்காளர் பட்டியலில் இருந்து யாரையும் நீக்க முடியாது. டிசம்பர் 4ம் தேதியுடன் இந்த பணிகள் முடிவடையும். எஸ்ஐஆர் பணிகளை குறிப்பிட்ட தேதிக்குள் (டிசம்பர் 4ம் தேதி) முடிக்க வேண்டும். கூடுதல் அவகாசம் கொடுக்க வாய்ப்பில்லை.
படிவங்களை பெற்ற வாக்காளர்கள் முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். சென்னையில் 96 சதவீதம் அளவுக்கு எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு அளிக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களில் 50 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன. 2 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் எஸ்ஐஆர் படிவத்தில் நிச்சயம் பெயர் இருக்கும். கணக்கீட்டுப்படிவங்களில் தகவல்கள் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்படாது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்தால் உரிய காரணம் தெரிவிக்கப்படும்.
பெயர் இடம்பெறாவிட்டால் காரணம் தெரிவிக்க வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதி வெளியான பிறகு விடுபட்டவர்கள் கண்டிப்பாக மீண்டும் புதிதாக சேர்க்கப்படுவார்கள். எஸ்ஐஆர் ஆன்லைன் சர்வர் சரியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒருவர் தவறான ஆவணத்தை கொடுக்கிறார் எனில் அதை பி.எல்.ஓக்கள்தான் (வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள்) கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
869 வெளிமாநிலத்தவர் வாக்களிக்க விண்ணப்பம்
டிசம்பர் 4 வரை எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கும் பணி நடைபெறும். 33,000 தன்னார்வலர்கள், 88 ஆயிரம் பி.எல்.ஓ.க்கள் எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ளனர். 327 பி.எல்.ஓக்கள் தங்கள் எஸ்ஐஆர் பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் படிவங்களை வாங்குகிறது என குற்றச்சாட்டு வைப்பது தவறானது. தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் 869 பேர் இங்கு வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.