இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு திமுக கோரிக்கை
சென்னை: இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது. பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்காளர் தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு, முதற்கட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் பாஜகவுக்கு சாதகமான தொகுதிகளில் போலி வாக்காளர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார். இதையடுத்து பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்.பி., என்.ஆர்.இளங்கோ செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும். பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் சில முறையற்ற விதிகளை நீக்க வேண்டும். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும்போது ஆதாரை ஏற்க வேண்டும். பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் பற்றி உரிய விளக்கம் அளிக்கவில்லை. பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றால் எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது என அவர் தெரிவித்தார்.