தமிழ்நாட்டையே உலுக்கிய சிறுமி பாலியல் வழக்கு; தஷ்வந்த் மரண தண்டனை ரத்து: விடுதலை செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. 2017ல் சென்னை அடுத்த போரூரில் அண்டை வீட்டில் வசித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் 2017 பிப்ரவரியில் கைதான தஷ்வந்த் 2017 டிசம்பரில் ஜாமினில் வெளியே வந்தார். ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் தப்பிக்க பணம் தராத தாய் சரளாவை அடித்துக் கொன்றார். தந்தை பிறழ்சாட்சியாக மாறியதால் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுவிக்கப்பட்டார்.
சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு 46 ஆண்டுகள் ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனையை செங்கல்பட்டு நீதிமன்றம் விதித்தது. செங்கல்பட்டு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்திருந்தது. மரண தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தஷ்வந்த் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறி உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டுள்ளது.
வழக்கில் முறையான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. சிசிடிவி காட்சிகளில் குற்றவாளி உறுதிப்படுத்தப்படவில்லை. டி.என்.ஏ ஆய்வும் ஒத்துபோகவில்லை. மரண தண்டனையை எதிர்த்த வழக்கில் குற்றத்தை உறுதி செய்ய தவறவிட்டதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.