கருவளையம் நீக்கும் குங்குமப்பூ எண்ணெய் !
குங்குமப்பூ மற்றும் பாதாம் எண்ணெய்
கருவளையப் பிரச்னையை போக்க குங்குமப்பூ மற்றும் பாதாம் எண்ணெயைக் கலக்கலாம். பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது கண்களுக்குக் கீழே உள்ள பகுதியை சரிசெய்ய உதவுகிறது.
தேவையான பொருள்: பாதாம் எண்ணெய் - 1 டீஸ்பூன், குங்குமப்பூ இழைகள் - ஒரு சில.
எப்படி பயன்படுத்துவது: ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெயில் குங்குமப்பூ இழைகளை இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் இந்த எண்ணெயை உங்கள் கண்களுக்கு கீேழ தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.இதனை தினமும் முயற்சிக்கவும். சில நாட்களில் நீங்கள் பலன்களைப் பார்க்கலாம்.
குங்குமப்பூ மற்றும் அலோவேரா ஜெல்
கற்றாழை ஜெல் உங்கள் சருமத்தை மென்மையாக்கி ஈரப்பதமாக்குகிறது. அதே நேரத்தில் குங்குமப்பூ நிறமிகளை சீராக்குகிறது. இந்த காரணத்திற்காக, குங்குமப்பூ மற்றும் கற்றாழை ஜெல் கலவையைப் பயன்படுத்துவதால் கருவளையங்கள் குறையும்.
தேவையானவை: கற்றாழை ஜெல் - 1 டீஸ்பூன், குங்குமப்பூ - சில துகள்கள்.
எப்படி பயன்படுத்துவது: முதலில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து அதில் குங்குமப்பூவைச் சேர்த்து கலக்கவும். அதை சுமார் 15 நிமிடங்கள் ஊறவைத்து, கண்களுக்குக் கீழே தடவவும். இப்போது மெதுவாக மசாஜ் செய்யவும். கூடுதல் ஈரப்பதத்திற்காக நீங்கள் அதை 20 நிமிடங்கள் அல்லது இரவு முழுவதும் அப்படியே விடலாம்.
குங்குமப்பூ ஐஸ் கட்டி
ஐஸ் கட்டி சருமத்தை இறுக்கமாக்கி வீக்கத்தைக் குறைக்கிறது. அதே நேரத்தில் ரோஸ் வாட்டர் சருமத்தைப் புத்துணர்ச்சியூட்டுகிறது. மேலும் குங்குமப்பூ இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக கருவளையங்கள் குறைகின்றன.
தேவையான பொருள்: ரோஸ் வாட்டர் - அரை கப், குங்குமப்பூ இழைகள் - 10-12.
எப்படி பயன்படுத்துவது: ரோஸ் வாட்டரில் 10 குங்குமப்பூ இழைகளைச் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்.காலையில் இந்தக் கலவையை ஒரு ஐஸ் கட்டி தட்டில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும். குங்குமப்பூ கலந்த இந்த ஐஸ் கட்டிகளை உங்கள் கண்களுக்கு கீழே சில நொடிகள் மெதுவாகத் தேய்க்கவும். தினமும் காலையில் இதை பயன்படுத்துங்கள். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தவும்.
- கவிதாபாலாஜி கணேஷ்.