தலித் குடியிருப்புகளில் 5,000 கோயில்கள் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை செயல்படுத்துகிறார் சந்திரபாபு நாயுடு: ஆந்திர காங். தலைவர் சர்மிளா குற்றச்சாட்டு
அமராவதி: தலித் குடியிருப்புகளில் 5000 கோயில்கள் கட்டும் திட்டத்தின் மூலம் ஆர்எஸ்எஸ்சின் சித்தாந்தங்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்படுத்துகிறார் என ஒய்.எஸ்.சர்மிளா குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், தேர்தல்களில் வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா பேசியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்(டிடிடி) உபரி நிதியை பயன்படுத்தி தலித் குடியிருப்புகளில் 5000 கோயில்கள் கட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். கோயில்களை கட்டுவதற்கு பதிலாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிதியின் மூலம் தலித் குடியிருப்புகளின் அடிப்படை உள்கட்டமைப்பு, மேம்பாட்டு திட்டங்களுக்கு செலவிடலாம்.
சந்திரபாபு நாயுடு உண்மையிலேயே தலித்துகளின் மேம்பாட்டில் அக்கறை கொண்டிருந்தால், அவர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவேண்டும். ஆந்திராவில் மாணவிகள் தங்கும் விடுதியில் 200 மாணவிகள் ஒரே ஒரு குளியலறையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். திருப்பதி தேவஸ்தானம் மிகவும் புனிதமான நிறுவனம், அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதன் வருமானத்தை பயன்படுத்தி கோயில் கட்டுவது நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை திணிக்கும் செயல். இது அரசியலமைப்பை மீறும் செயல். இவ்வாறு அவர் பேசினார்.