தி.மலை அண்ணாமலையார் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு தேவையான கூடுதல் வசதிகளை செய்து தருவது குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ.வேலு ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பவுர்ணமி நாட்களுக்கு இணையாக அரசு விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்காக வருகின்றனர். ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் இருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் சாதாரண நாட்களில் கூட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் போன்றவை ரத்து செய்யப்பட்டது. பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் பொது தரிசன வரிசையில் ராஜகோபுரத்தை கடந்தும், கட்டண தரிசன வரிசை அம்மணி அம்மன் கோபுரத்தை கடந்து இரட்டை பிள்ளையார் கோயில் வரையிலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் தரிசன வரிசையில் செல்லும் அவ்வப்போது பக்தர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பாக மாறிவிடுகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க தரிசன வரிசையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் தரிசன வரிசையில் குழந்தைகளுடன் காத்திருந்த தாய்மார்களுக்கு பால், மற்றும் பக்தர்களுக்கு வாழைப்பழம் போன்றவற்றை வழங்கினார். மேலும் பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் மாடவீதிகளில் ஆய்வு செய்தனர். மாட வீதியில் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்து, பக்தர்களுக்கு இடையூறு இன்றி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். மேலும் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.