சைப்ரஸ் வீதிகளில் வலம்வரும் 10 லட்சத்திற்கும் அதிகமாக பூனைகள்: கட்டுப்படுத்த முடியாமல் திணறிவரும் சைப்ரஸ் அரசு
நிகோசியா: சைப்ரஸ் நாட்டில் மக்கள் தொகைக்கு இணையாக பூனைகளை எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாட்டு அரசு திணறி வருகிறது. மத்திய தரைக்கடலில் உள்ள சிறிய தீவு நாடான சைப்ரஸ் வரலாற்றில் பூனைகளுக்கு தனி இடம் உண்டு. 9500 ஆண்டுகளுக்கு முந்தைய புதை படிமங்களில் மனிதருடன் புதைக்கப்பட்ட பூனையின் எலும்புகள் கண்டறியப்பட்டதே அதற்கு சிறந்த சான்று. இப்படி பூனையுடன் பின்னி பிணைந்த வரலாறுகொண்ட சைப்ரஸ் நாட்டில் மக்கள் தொகைக்கு இணையாக பூனைகள் பெருகியுள்ளன.
கட்டுப்பாடற்ற இனப்பெருக்கம் ஊர் மக்களின் பராமரிப்பு போன்ற காரணங்களால் சைப்ரஸ் நாடெங்கும் பூனைகள் மையமாகவே காட்சியளிக்கிறது. 13 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நாட்டில் தெரு பூனைகள் மட்டும் 10 லட்சத்திற்கு அதிகமாக பெருகியுள்ளது. நாட்டின் பூனை கருத்தரிப்பு திட்டம் பலனளிக்கவில்லை என்றும். பூனைகளால் தீவின் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சைப்ரஸில் கடந்த 2023ஆம் ஆண்டின் பெலைன் கொரோன வைரஸால் சுமார் 3 லட்சம் பூனைகள் கொத்து கொத்தாக உயிரிழந்தனர். ஆனால் அடுத்து இரண்டு ஆண்டுகளில் பூனைகளின் எண்ணிக்கை அபரிமிதமாக பெருகியுள்ளன. நாட்டின் மக்கள் தொகையை தாண்டி பூனைகள் பெருகும் சூழல் உள்ளதால் மனிதர்களுக்கே அது கேடாய் முடியும் அபாயம் சைப்ரஸ் நாட்டில் நிலவி வருகிறது.