டிட்வா புயலால் 5 அடிக்கு மேல் கடல் சீற்றம் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைக்கு 2வது நாளாக மக்கள் செல்ல தடை: சர்வீஸ் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன
சென்னை: டிட்வா புயலால் காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் நேற்று அதிகமாக இருந்ததால், பாதுகாப்பு கருதி மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட்நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல இரண்டாவது நாளாக நேற்றும் போலீசார் தடை விதித்தனர்.டிட்வா புயலின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. அதேநேரம் டிட்வா புயலின் சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ளதால், காற்றின் வேகம் மற்றும் கடலின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி போலீசார் மெரினா மற்றும் பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் உள்ளே வர தடை விதித்தனர்.
அதேநேரம் நேற்று மாலைக்கு பிறகு ‘காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்ததால், கடலின் சீற்றம் 5 அடிக்கு மேல் எழுந்தது’. இதனால் மீனவர்கள் யாரையும் கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் தடை விதிக்கப்பட்டது. இருந்தால், பொதுமக்கள் சிலர் உற்சாக மிகுதியில் கடற்கரை பகுதிகளுக்கு கார்களில் வந்தனர். அவர்களை போலீசார் சர்வீஸ் சாலைகளுக்குள் விடாமல் திருப்பி அனுப்பினர்.
அண்ணாசதுக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை காமராஜர் சாலையில் இருந்து கடற்கரைக்கு செல்லும் அனைத்து சர்வீஸ் சாலைக்கு செல்லும் நுழைவு வாயில் முழுவதும் போலீசார் தடுப்புகள் அமைத்து மூடினர். கடற்கரைக்கு வரும் பொதுமக்களிடம் காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலம் உள்ளே வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். போலீசாரின் தடையை மீறி யாரேனும் உள்ளே வந்தால் அவர்களை வெளியேற்றும் வகையில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் போலீசார் மற்றும் மெரினா உயிர்காக்கும் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
டிட்வா புயல் கரையை கடக்கும் வரை கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தேவையின்றி வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கடற்கரை பகுதியில் போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.