மோன்தா புயல் எதிரொலியாக ஆந்திராவில் முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவை ரத்து!
அமராவதி: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள 'மோன்தா' புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றது. வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவின் மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே இன்றிரவு தீவிரப் புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே மாலை அல்லது இரவு மோன்தா புயல் கரையை கடக்க உள்ளது. புயல் கரையை நோக்கி நகர்ந்து வரும்போது மழையின் தீவிரம் அதிகம் இருக்கும். இதனால் ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதி கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மோன்தா புயல் எதிரொலியாக ஆந்திராவில் முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பதியில் இருந்து (22708) நாளை இரவு 9.50 மணிக்கு விசாகப்பட்டினம் புறப்படும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டது. மசூலிப்பட்டினத்தில் இருந்து (17215) இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு தர்மாவரம் வரை செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டது.
விசாகப்பட்டினம், விஜயவாடா மார்க்கத்தில் 150க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிக்கப்பட்டது. விசாகப்பட்டினம், விஜயவாடா மார்க்கத்தில் செல்லும் 116 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, காக்கிநாடா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் டிக்கெட் கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும், புயல், மழையால் நடுவழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டால் உணவு, குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.