டிட்வா புயல் எச்சரிக்கை 54 விமானங்கள் இன்று ரத்து
சென்னை: டிட்வா புயல், கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்படும் விமானங்கள் மற்றும் வருகை விமானங்கள் என 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. அதன்படி, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், பெங்களூரு, ஐதராபாத், இலங்கை யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் 54 விமானங்கள் இன்று காலை முதல் இரவு வரையில் ரத்து செய்யப்படுகின்றன. இந்த விமானங்கள் அனைத்தும் ஏடிஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள். கடுமையான சூறைக்காற்று பலத்த மழையின் போது, இந்த ஏடிஆர் ரக விமானங்கள் வானில் பறப்பது ஆபத்து என்பதால், பயணிகள் நலன் கருதியும், விமானங்கள் பாதுகாப்பு கருதியும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். அதோடு இந்த 54 விமானங்கள் தவிர, மேலும் சில விமானங்களும் ரத்தாக வாய்ப்பு உள்ளதால் பயணிகள் தங்கள் பயணங்களுக்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு தங்களுடைய பயணங்களை அமைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.