டிட்வா புயல் எச்சரிக்கையை முன்னிட்டு 49 சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் ஏற்பாடு: பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம்; போலீஸ் கமிஷனர் அருண் அறிவுறுத்தல்
சென்னை: டிட்வா புயல் எச்சரிக்கையை முன்னிட்டு மீட்பு பணிகளுக்காக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் மக்களுக்கு உதவிடும் வகையில் 49 சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைக்காக காவல் ஆணையர் அலுவலகத்தில் தலைமை கட்டுப்பாட்டு அறையும், (044-23452437), 12 காவல் மாவட்ட காவல் துணை ஆணையர் அலுவலகங்களில் 12 கட்டுப்பாட்டு அறைகளும் மற்றும் மக்களுக்கு உதவிட 49 இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளும் ஒருங்கிணைந்து உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் செயல்படுத்தப்படுகிறது.
12 காவல் மாவட்டங்களில் உள்ள சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மீட்பு குழுவும் ஒரு தலைமைக்காவலர் தலைமையில் 10 காவலர்கள் என மொத்தம் 120 காவலர்கள் இருப்பர். காவல் மருத்துவமனையிலிருந்து வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களுக்கு முதல் மருத்துவ சிகிச்சை அளிக்க தலா 1 குழு வீதம் 2 சிறப்பு மருத்துவ உடனடி சிகிச்சை மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள், விளம்பர பலகைகள் மற்றும் புயல் காற்றினால் பறக்கக்கூடிய பிளாஸ்டிக், இரும்புத்தகடு, கட்டுமான பணியில் உள்ள கண்ணாடி மற்றும் தடுப்புகள் உள்ளிட்ட இலகு பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ரோந்து வாகன குழுவினர் மூலம் அறிவுறுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது சூழ்நிலைக்கேற்ப போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவதை, உடனுக்குடன் அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடற்கரை பகுதிகளில் டிட்வா புயலின் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தால், அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் காரணமாக அவசர உதவி மற்றும் இடர் ஏற்பட்டால், காவல்துறை அவசர உதவி எண் 100 (அ) 112, சென்னை பெருநகர மாநகராட்சி உதவி எண் 1913, தீயணைப்பு மற்றும் மீட்பு குழு அவசர உதவி எண் 101 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.