நாளை உருவாகும் என கணிக்கப்பட்டு இருந்த சூழலில் இன்று உருவாகிறது ‘மொன்தா’ புயல்; சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்நிலையில், புயல் நாளை உருவாகும் என கணிக்கப்பட்டு இருந்த சூழலில், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி 24ம் தேதி மாலை வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவியது. அதனை தொடர்ந்து நேற்று காலை மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை புயலாக உருவாகும் என கணிக்கப்பட்டு இருந்த சூழலில், இன்று மாலை 5.30 மணிக்கு தெற்கு மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடைந்து, வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 28ம் தேதி வாக்கில் தீவிரப்புயலாக வலுப்பெறக்கூடும்.
மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக 28ம் தேதி மாலை - இரவு நேரத்தில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். காலை 9 மணி நிலவரப் படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு சுமார் 790 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயலுக்கு தாய்லாந்து பரிந்துரைத்த ‘மொன்தா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேலும் புயல் சின்னத்தின் நகர்வைப் பொறுத்து, தமிழ்நாட்டில் மழைப்பொழிவு இருக்கும். இந்த புயல் சின்னம் சென்னையை ஒட்டி கடந்து ஆந்திராவுக்கு சென்றால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மாறாக, கடலில் விலகிச் சென்றால் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாளை ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.